ஆன்மிக களஞ்சியம்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில்

Published On 2023-06-03 11:30 GMT   |   Update On 2023-06-03 11:30 GMT
  • மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
  • பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.

தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தை அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.

தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது. ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி அந்த போட்டி தொடங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் கம்மலை எடுத்து அணிந்து கொண்டார்.

கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர். இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும். இங்குள்ள துர்க்கைக்கு ராகு காலத்தில் விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது. புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.

Tags:    

Similar News