ஆன்மிக களஞ்சியம்

சர்ப்ப தோஷங்களைப் போக்கும் ஸ்ரீபெரும்புதூர்

Published On 2023-06-17 11:29 GMT   |   Update On 2023-06-17 11:29 GMT
  • கால-சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாகசர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
  • ஸ்ரீஆதிசேஷனே, ஸ்ரீராமனுஜராக அவதரித்தது உலகறிந்த உண்மையாகும்.

கால-சர்ப்ப தோஷத்தை மற்ற தோஷங்களைப் போலவே ஜாதகத்தின் லக்கினம், பூர்வ புண்ணியம் ஜெனன காலத்தின் மற்றய கிரக நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, தீய பலன்களை விளைவிக்கும்.

ஆதலால், கால-சர்ப்ப தோஷம் உள்பட அனைத்து தோஷங்களையும், அவற்றின் தன்மை, அளவு, ஏற்படும் காலம் இவற்றைத் தக்க ஜோதிடரைக் கொண்டு ஆராய்ந்து, அறிந்து கொள்ளாமல் கலங்க வேண்டிய அவசியமில்லை.

பாதிப்பின் கடுமையைத் தக்க பரிகாரத்தினால் குறைக்க முடியும். ஆயினும் அந்தப் பரிகாரத்தை - சாந்தியை - அதிகப்பொருட்செலவில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.

சாதாரணமாக, சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும். ஆனால் கால-சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.

இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில், சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் பரிகார ஸ்சேத்திரங்களில் ஒன்றாகும்.

சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால் பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும் கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.

"ஆனந்த ப்ரதம்ம ரூபம் - திரேதாயோம் பலபத்ரச்ச கலியுகே கசதி பவிஷ்யதி" -ஸ்ரீவிஷ்ணுபுராண ஸ்லோகம்.

ஸ்ரீஆதிசேஷனே, ஸ்ரீராமனுஜராக அவதரித்தது உலகறிந்த உண்மையாகும்.

ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் கால-சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாகசர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால் அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும். (ஆதிசேஷனுக்கு அனந்த சர்ப்ப என்ற பெயர் உண்டு).

இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, கால-சர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

Tags:    

Similar News