ஆன்மிக களஞ்சியம்

நாகதோஷ பரிகாரம்

Published On 2023-07-27 08:12 GMT   |   Update On 2023-07-27 08:12 GMT
  • கறுப்பு வேட்டி வாங்கி தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.
  • 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

ராகு, கேது, தலமான காளகஸ்திக்கு சென்று மூன்று இரவுகள் தங்கி ஈசனை வணங்கி வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து குழந்தைகள் பிறப்பார்கள்.

ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி தேவிபட்டினம் போகும் பஸ்சில் ஏறி நவபாஷணத்தில் இறங்கவும். கடலில் ஸ்ரீராமபிரானால் அமைக்கப்பட்ட நவக்கிரகங்கள் இருக்கின்றன. கடலில் நீராடி நவக்கிரக பூஜை செய்தால் நாகதோஷம் பரிகாரமடையும். இதனால் குழந்தை பாக்யம் உண்டாகும்.

ராமநாதபுரத்தில் இருந்து தர்ப்ப சயனம் சென்று விபீடணனுக்கு அபயமளித்த சேத்திரம் வணங்கி, அங்குள்ள தல விருட்சத்தில் தாங்கள் கட்டியுள்ள உடையில் சிறிது கிழித்து ஒரு சிறு கல் வைத்து மரக்கிளையில் கட்டி வந்தால் நாகதோஷம் விலகும்.

நாகர்கோவிலில் நாகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கு சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷம் பரிகாரமாகும்.

கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேசுவரம் இருக்கிறது. அந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

பொருள் படைத்தவர் தங்கத்தால் குழந்தை உருவம் செய்து ஏழைக்கு அன்னம் அளித்து வேட்டி, துண்டு தாம்பூலம் பழத்துடன் சொர்ண விக்ரகத்தைத் தானம் செய்தால் நாகதோஷம் விலகும்.

தங்கத்தில் செய்ய சக்தியில்லாதவர்கள் வெள்ளியில் செய்து தானம் அளிக்கலாம்.

தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூஜித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி, துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.

கருங்கல்லில் நாக பிரதிஷ்டை செய்து ஆறு, குளம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

இரண்டு நாகங்கள் பின்னிக்கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாட்கள் விளக்கேற்றி வைத்து பூஜித்தால் நாகதோஷம் விலகும்.

கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலைநாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் பூஜித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

குளம் அல்லது நதிக்கரையில் அரசு வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும். நல்ல குழந்தைகள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.

வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

ஓர் ஏழைக்கு அன்னதானம் செய்து அளித்து புது வேட்டி துண்டு. தாம்பூலம் தட்சணையுடன் பால் பசுவும் கன்றையும் தானம் செய்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.

வீட்டில் ராகு படம் வைத்து தினமும் பூஜை செய்யலாம். தினமும் இராமாயணம் படிக்கலாம்.

மாதம் ஒரு சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டு வரலாம். நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஒரு தம்பதிக்கு உணவு அளித்து தாம்பூலம் தட்சணை கொடுத்து வலம் வந்து நமஸ்கரித்து வருவதால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

புத்திரதோஷம் ராகுவால் ஏற்பட்டால் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தின் போது ராகுவின் இஷ்ட தெய்வமான பத்ரகாளிக்கு எலுமிச்சம் பழத்தோலில் எண்ணெய் விட்டுத் திரிபோட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தோஷம் நீங்கி குழந்தை பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர்.

சிவாலயம் சென்று நவக்கிரகப் பிரதட்சணம் செய்யும் போது முதலில் வசமாக ஒன்பது முறை வலம் வந்து பிறகு ராகு கேதுவுக்கு பிரீதியாக இரண்டு முறை இடமாக வலம் வரவேண்டும். இவ்விதம் தினமும் செய்து வந்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறந்து நீண்ட ஆயுகளுடன் இருப்பார்கள்.

நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்ய செல்லும் போது ஓரு பிடி உளுந்து எடுத்துச் செல்லவும். ராகுவின் பாதங்களில் உளுந்தையும் கேதுவின் பாதங்களில் கொள்ளையும் வைத்து வணங்கி வந்தால் நாக தோஷம் பரிகாரமாகும்.

ராகுவை பிரீதி செய்ய கறுப்பு வேட்டி வாங்கி தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.

Tags:    

Similar News