ஆன்மிக களஞ்சியம்

நங்கைநல்லூர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்

Published On 2023-07-15 09:13 GMT   |   Update On 2023-07-15 09:13 GMT
  • ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், அஷ்ட லக்ஷ்மி தேவிகளை வலம் வந்து வழிபட தோஷங்கள் நீங்கி வளம் பெரும் என்பது நம்பிக்கை.
  • ஸ்ரீ சுதர்சனர் சன்னதி எதிரே உள்ள அலங்கார மண்டபத்தில் பிரயோகச் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஹிரண்யனை வதம் செய்வதற்காக ஸ்ரீஅகோபிலத்தில் தோன்றியவர். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரசித்தி பெற்ற பல தலங்களில் யோக நரசிம்மராக, உக்ர நரசிம்மராக, சிம்மாசலராக என தோற்றங்களில் காட்சி தருகிறார். அவற்றில் சிறப்பானதொரு கோலம் சாந்த மூர்த்த கோலம்.

அக்கோலத்தில், உக்ரம் தணிந்தவராக, சாந்தமூர்த்தியாக தாயார் ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன் எழுந்தருளியுருக்கும் தலம்தான் நங்கைநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்.

"தட்சண தீபாலயம்" என்று அழைக்கப்பட்ட அப்பகுதி, நங்கையுடன் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் எழுந்தருளியதால் "நங்கைநல்லூர்" என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி நங்கநல்லூர் ஆனது.

பல வகைகளில் சிறப்புப் பெற்றதாக இவ்வாலயம் விளங்குகிறது. ஆலயத்தில் இருக்கும் "ஸ்ரீ சுதர்சனர்" சன்னதி மிகுந்த சக்தி வாய்ந்தது.

சுதர்சன யந்திரம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் தீய பாதிப்புகள் உடையவர்கள், மன பாதிப்புக்கு உள்ளானவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு தியானம் செய்ய நற்பலன் கிடைக்கிறது.

ஸ்ரீ சுதர்சனரின் மறுபுறத்தில் யோக நரசிம்மர் பஞ்ச முக ஆதிசேஷனின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். நாங்கு வேதங்களும் நான்கு சக்கரங்களாக இவரது திருக்கரங்களில் காட்சி அளிக்கின்றன.

சுற்றிலும் அஷ்ட லக்ஷ்மியர் அனுக்ரஹப் பார்வையுடன் எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், அஷ்ட லக்ஷ்மி தேவிகளை வலம் வந்து வழிபட தோஷங்கள் நீங்கி வளம் பெரும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ சுதர்சனர் சன்னதி எதிரே உள்ள அலங்கார மண்டபத்தில் பிரயோகச் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயம் அகழாய்வு செய்யப்பட்ட போது கிடைத்த மஹாவிஷ்ணுவின் பிரயோகச் சக்கரமே இங்கு பிரார்த்தனைச் சக்கரமாக உள்ளது. இறைவனை வேண்டி இந்தப் பிரார்த்தனைச் சக்கரத்தின் மீது கைகளை வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர் பக்தர்கள்.

மஹாப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், இங்கு வந்து வழிபட்டு, இவ்வாலய இறைவனை "வினை தீர்க்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்" என அழைத்துச் சிறப்புச் செய்துள்ளார். அதற்கேற்றவாறு இங்கு வந்து வழிபட்டு தங்கள் வினைகளை நீக்கிக் கொண்டவர்கள் ஏராளம்.

Tags:    

Similar News