- அமாவாசையை அடுத்துவரும் நவமியை சுக்கில பட்ச நவமி.
- நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி மகாநவமி.
நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து கால கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஒன்பதாவது திதி நவமி ஆகும். நவ எனும் வடமொழிச்சொல் ஒன்பது எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஒன்பதாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.
30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறை காலத்தின் ஒன்பதாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறை காலத்தின் ஒன்பதாம் நாளுமாக இரண்டு முறை நவமி திதி வரும்.
அமாவாசையை அடுத்துவரும் நவமியை சுக்கில பட்ச நவமி என்றும், பூரணையை அடுத்த நவமியைக் கிருட்ண பட்ச நவமி என்றும் அழைக்கின்றனர்.
பொதுவாக அட்டமி, நவமியில் எக்காரியத்தைச் செய்தாலும் அது துலங்காது என்பது நம்பிக்கை. ஆனால் தீயவர்கள் செய்தால் தான் துலங்காது என்றும் சொல்லப்படுகிறது.
இந்து சமயத்தினருக்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாக கொண்டே வருகின்றன.
இராமபிரான் நவமித் திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் இராம நவமி என்ற பெயரில் சித்திரை மாத வளர்பிறை நவமியில் கொண்டாடப்படுகிறது.
மகாநவமி - புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கும் நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி மகாநவமி என்று குறிப்பிடுகின்றனர்.
தசமி திதி
தசமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பத்தாவது திதி தசமி ஆகும்.
தச எனும் வடமொழிச் சொல் பத்து எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பத்தாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.
30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பத்தாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ணபட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பத்தாம் நாளுமாக இரண்டு முறை தசமித் திதி வரும்.
அமாவாசையை அடுத்துவரும் தசமியைச் சுக்கில பட்சத் தசமி என்றும், பூரணையை அடுத்த தசமியைக் கிருட்ண பட்சத் தசமி என்றும் அழைக்கின்றனர்.
இந்து சமயத்தினர்க்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாக கொண்டே வருகின்றன.
விசய தசமி - புரட்டாதி வளர்பிறைத் தசமி. இது நவராத்திரியைத் தொடர்ந்து வரும் பத்தாவது நாள் இதை வட இந்தியாவில் ராம்லீலா என்று கொண்டாடுவர்.