ஆன்மிக களஞ்சியம்

முருகப்பெருமான் ஓம்கார வடிவானவன்

Published On 2023-06-27 12:15 GMT   |   Update On 2023-06-27 12:15 GMT
  • ஓம் என்னும் பிரணவப் பொருளை சிவப்பெருமானுக்கு மட்டுமின்றி உலகுக்கே முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
  • முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதி நூலை பாடியிருக்கின்றார். அதன் மூலம் ஆறு திருத்தலங்கள், முருகனின் அறுபடை வீடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

1.திருப்பரங்குன்றம்- சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகள் தெய்வானையை மணந்த திருத்தலமிது.

2. திருச்செந்தூர் -அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச்சூடிய திருத்தலமிது.

3. பழனி- மாங்கனிக்காக தமையன் விநாயக ரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுத பாணியாக நின்ற திருத்தலமிது.

4. சுவாமிமலை- தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.

5. திருத்தணி-சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

6.பழமுதிர் சோலை- அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

முருகன் தமிழ்க்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலவன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் அவர் அழைக்கப்படுகிறார்.

புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி சிவனிட மிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவண பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் 6 பேர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் இவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஓம் என்னும் பிரணவப் பொருளை சிவப்பெருமானுக்கு மட்டுமின்றி உலகுக்கே முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு. ஓம் என்பது அ.உ.ம. என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது. அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும். அ.உ.ம. என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது. முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ.உ.ம. மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன். முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள். முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடி கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

Tags:    

Similar News