- தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும்
- பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.
1. பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவில் சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது.
2. ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருப்பதால் கோவிலில் எப்போதும் நன்கு காற்றோட்டமாக உள்ளது.
3. பாவனி அம்மன் இத்தலத்தில் அகண்ட பரிபூரண ஆனந்த ஜோதியாய், வழிபடும் அடியார்களின் வல்வினை போக்கும் வண்டார் குழலியாய், 7 அவதாரங்களில் ஒன்றாகிய சங்கு, சக்கர பேருருவாய் கோவில் கொண்டு எழுந்துருளியுள்ளாள்.
4. ஆடி திரவிழா அம்மன் தலங்களில் 4 அல்லது 5 வாரம்தான் நடைபெறும். ஆனால் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் மட்டும் 14 வாரங்கள் ஆடிப்பெருவிழா நடைபெறும்.
5. பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மன் சுயம்புவாக தோன்றியுள்ளாள்.
6. அபிஷேக நேரம் தவிர மற்ற நேரங்களில் சுயம்பு உருவை அம்மன் தலை கவசத்தால் மூடி விடுவார்க்ள.
7. பஸ்சில் வரும் பக்தர்கள்தான் கோவில் நுழைவாயிலுக்கு எளிதாக வர முடியும். கார், பைக்கில் செல்பவர்கள் ஆலயத்தின் பின் பகுதி வழியாகத்தான் உள்ளே வர முடியும்.
8. ஆலயத்தின் இடது பக்கத்தில் சித்புத் விநாயகர் மற்றும் மாதங்கி சன்னதிகள் உள்ளன. அந்த இரு சன்னதிகளிலும் வழிபட்ட பிறகே பவானி அம்மனை சென்று வணங்க வேண்டும்.
9. மூலவரை சுற்றியுள்ள பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.
10. இத்தலம் அருகிலேயே மிகப்பெரிய புற்றுக்கோவில் உள்ளது. தகர கூரை வரை உயர்ந்து அந்த புற்று வளர்ந்துள்ளது.
11. இத்தலத்தில் ஆங்காங்கே பாம்பு நடமாடுவது சகஜமான ஒன்று. ஆனால் அந்த சர்ப்பங்கள் யாரையும் தீண்டியதே இல்லை.
12. புற்று கோவிலில் இருந்து தினமும் இரவு பவானியம்மன் கருவறைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு வந்து செல்வதாக சொல்கிறார்கள்.
13. தினமும் காலை பூஜைக்காக கருவறை கதவை திறக்கும் முன்பு 4, 5 தடவை கதவை தட்டி விட்டு சிறிது நேரம் கழித்தே அர்ச்சகர்கள் நடையைத் திறப்பார்கள். சர்ப்பம் உள்ளே இருந்தால் சென்று விடும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.
14. பவானி ஆலய நாகவழிபாட்டை வலியுறுத்தும் வகையில் கோவில் பிரகாரங்களில் சர்ப்பம் சிலைகளும் நாகதேவதை சிலைகளும் செதுக்கப்பட் டுள்ளன.
15. பெரியபாளையம் ஆலய வழிபாடுகளில் மிக முக்கியமானது வேப்பஞ்சேலை பிரார்த்தனை வழிபாடுதான். நூற்றுக்கு 50 பக்தர்கள் வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்கிறார்கள்.
16. செவ்வாய், வெள்ளி என்ற கணக்கு இல்லாமல் தினமும் இங்கு வேப்பஞ்சேலை வழிபாடு நடப்பது குறிப்பிடத்தக்கது.
17. பெரியபாளையம் தலத்தின் விருட்சம் வேப்பமரமாகும். கோவில் உட்பிரகாரத்தில் இத்தல விருட்சம் உள்ளது.
18. பெரியபாளையம் கோவிலில் கொடி மரம் கிடையாது. அதற்கு பதில் சக்தி மண்டபம் உள்ளது.
19. மற்ற கோவில்களில் விழா தொடங்கி விட்டால் அதன் அடையாளமாக கொடியேற்றம் நடைபெறும். இந்த தலத்தில் சக்தி மண்டபத்தில் பந்தகால் நாட்டுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
20. பவானி அம்மன் நேர் பார்வையில் நுழைவாயில் அருகே சக்தி மண்டபம் உள்ளது.
21. சக்தி மண்டபம் அருகில்தான் திருஷ்டி பரிகார பூஜைகள் அனைத்தும் நடைபெறுகின்றன.
22. சக்தி மண்டபம் அருகில் உள்ள மரத்தில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும். தொட்டில் வாங்கி கட்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
23. இத்தலத்தில் சுயம்புக்கு காலை 8 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணி ஆகிய 3 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது.
24. கோவில் கருவறை முகப்பில் சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் தங்கையே இங்கு தெய்வம்சமாக இருப்பதால் அப்படி செதுக்கப்பட்டுள்ளது.
25. இத்தலத்தில் சுயம்பு மீது பூசப்பட்டு எடுத்துத் தரப்படும் மஞ்சளுக்கு அதிக மகிமை உண்டு.
26. அந்த மஞ்சளை தண்ணீரில் கலந்து தீர்த்தமாக அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகி விடும்.
27. அந்த மஞ்சளை கொஞ்சம் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு, வெளியில் செல்லும் போது பூசிச் சென்றால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
28. பெரியபாளையம் அம்மனுக்கு நிறைய மஞ்சள் பூசி பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வது என்றால் பிரியம் அதிகம். எனவே அர்ச்சகர் தினமும் அன்னைக்கு நிறைய சந்தனம் பயன்படுத்தி அலங்காரம் செய்கிறார்.
29. பவானி அம்மன் சுயம்பு மஞ்சளை இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களும் வந்து பெற்று சென்று பயன் அடைகிறார்கள்.
30. பவானி அம்மனுக்கு தினமும் 3 தடவை அபிஷேகம் முடிந்ததும் மஞ்சள் பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.
31. ஆடி விழாவில் 10-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை சுயம்பு மீது சூரிய ஒளிபடும். அந்த சமயத்தில் மின் விளக்குகளை அனைத்து விட்டு சூரிய ஒளி வழிபாட்டை பக்தர்களை காண செய்கிறார்கள்.
32. கோவில் வளாகத்தில் துலாபாரம் கொடுக்கும் வசதி உள்ளது.
33. ஆடி விழாவின் 6-வது, 7-வது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடலோரப் பகுதி மீனவர்கள் திரண்டு வந்து பவானி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
34. பெரியபாளையம் கோவிலுக்கு தினமும் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள்.
35. விழா நாட்களில் பவானி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை இருக்கும்.
36. உண்டியலில் பணம் மட்டுமின்றி தாலியையும் பெண்கள் கழற்றி போடுகிறார்கள். கை, கால் போன்ற வெள்ளி உறுப்புகளையும் வாங்கி செலுத்து கிறார்கள்.
37. முகூர்த்த நாட்களில் இத்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன. அதற்கு வசதியாக கோவில் வளாகத்துக்குள்ளேயே திருமண மண்டபம் உள்ளது.
38. இத்தல தீர்த்தம் சக்தி வாய்ந்தது. எனவே வர முடியாத நோயாளிகளுக்காக இத்தல தீர்த்தத்தை பாட்டில்களில் வாங்கி செல்கிறார்கள்.
39. இத்தல தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
40. இத்தலம் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.
41. ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலம் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். அன்று எப்போது வேண்டுமானாலும் சென்று வழிபடலாம்.
42. ஆடி மாதம் விழாவின் 14-வது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்து இருக்கும்.
43.பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் மிகச் சிறந்த பிரார்த்தனை தலம் மட்டுமின்றி பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
44. ஆடி விழாவில் பங்கேற்க மாட்டு வண்டி கட்டி, தொலை தூரங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வரும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது.
45. பவானி அம்மனை குலதெய்வமாக வழிபடுபவர்கள் பெரியபாளையத்தில் குறைந்த பட்சம் 3 நாட்கள் தங்கி இருந்து வழிபாடு செய்கிறார்கள்.
46. ஆரணியாற்றில் குடில் அமைத்து தங்கும் பக்தர்கள் ஆடு, கோழிகளை படையலிட்டு சாப்பிட்டு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
47. ஒரு குடும்பத்தில் உள்ள சகோதர- சகோதரிகள் அனைவரும் ஒன்றாக பெரியபாளையத்தம்மனை வணங்க வருவதால் இங்கு குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
48. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழிபாதை தலங்களில் ஒன்றாக பெரியபாளையம் இருந்துள்ளது.
49. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
50. தைப்பூசம் தினத்தன்று ஆரணியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அன்னைக்கு அபிஷேகம் செய்வார்கள்.