ஆன்மிக களஞ்சியம்

பவுர்ணமி திதி

Published On 2023-07-28 06:14 GMT   |   Update On 2023-07-28 06:14 GMT
  • சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும்.
  • அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.

பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி (பௌர்ணமி) என்றும் இந்நாள் அழைக்கப்பெருகிறது.

இந்து சமயத்தில் சந்திரன் கடவுளாக கருதப்படுகிறார். அவர் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தார்.

அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போக சாபம் கொடுத்ததார். பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாக குறைந்து இறுதியில் ஒன்று மட்டும் மீதமிருக்கும் போது, சிவபெருமானை தஞ்சமடைந்தார் சந்திரன்.

சந்திரனை காக்க தனது சடாமுடியில் வைத்துக்கொண்டார், எனினும் தட்சன் சாபம் முழுவதும் தீராது, பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும், பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரம் அளித்தார்.

பௌர்ணமி விரதங்கள்

இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.

சித்ரா பவுர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.

வைகாசி பவுர்ணமி - முருகனின் பிறந்தநாள்.

ஆனி பவுர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.

ஆடி பவுர்ணமி - திருமால் வழிபாடு

ஆவணி பவுர்ணமி - ஓணம், ரக்சாபந்தனம்

புரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவர பூசை

ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்

கார்த்திகை பவுர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு

மார்கழி பவுர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்

தை பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்

மாசி பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்

பங்குனி பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்

திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது.

அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதம் இருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.

மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திராபௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.

சதுர்த்தசி திதி

சதுர்த்தசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினான்காவது திதி சதுர்த்தசி ஆகும்.

சதுர்த்தச எனும் வடமொழிச் சொல் பதினான்கு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினான்காவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினான்காம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினான்காம் நாளுமாக இரண்டு முறை சதுர்த்தசி திதி வரும்.

அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தசியைச் சுக்கில பட்சத் சதுர்த்தசி என்றும், பூரணையை அடுத்த சதுர்த்தசியைக் கிருட்ண பட்சத் சதுர்த்தசி என்றும் அழைக்கின்றனர்.

அமாவாசைக்கு முதல் நாள் வரும் சதுர்த்தசி இருத்தை என அழைக்கப்படுவதுடன் இது சுப காரியங்களுக்கு விலக்கப்படும்.

Tags:    

Similar News