ஆன்மிக களஞ்சியம்

புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்

Published On 2023-07-03 12:11 GMT   |   Update On 2023-07-03 12:11 GMT
  • திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.
  • முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும்.

சென்னை அருகில் உள்ள புட்லூரில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் கோலாகலமாக இருக்கும்.

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோவிலில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும்.

குழந்தைப் பேறு வேண்டுவோர் எலுமிச்சைப் பழம் மற்றும் தொட்டிலை எடுத்து வந்து, கோவிலின் உள்ளே இடது புறத்தில் புற்றுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில், கட்டிவிட்டு பிரார்த்திக்க வேண்டும். திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.

கருவறையில் உள்ள புற்று வடிவில் கோலோச்சும் பூங்காவனத்தம்மனது பாதத்தில் எலுமிச்சைப் பழத்தை வைத்து, அப்படியே உருட்டிவிடுவார் பூசாரி. இதை பெண்கள், தங்கள் புடவைத் தலைப்பு அல்லது சுடிதார் துப்பாட்டாவால் ஏந்தி எடுத்துவந்து, கோவில் வளாகத்தில் அமர்ந்து அப்படியே தோலுடன் கடித்துச் சாப்பிட வேண்டும்.

இதே போல் தொடர்ந்து 9 வாரங்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து பிரார்த்திக்க வேண்டும். முதல் வாரம் மட்டுமே தொட்டில் கட்ட வேண்டும் (மஞ்சள் சரடும் அப்படியே!). பிறகு ஒவ்வொரு வாரமும் எலுமிச்சைப் பழம் மட்டும் எடுத்துவந்தால் போதும்!

செவ்வாய், வெள்ளி மட்டுமின்றி எந்த நாளும் வழிபடலாம்! முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும். செவ்வாய்க்கிழமை என்றால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று வரவேண்டும். பக்தர்களில் சிலர், ஆடி மாதம் முழுவதும் பிரார்த்தனையைத் தொடர்வதுண்டு. ஆடிப்பூரம் மிகவும் விசேஷ நாளகும். அன்று பெண்கள் தங்கள் வேண்டுதலை நினைத்து பிரார்த்தனையைத் தொடங்கலாம்.

Tags:    

Similar News