- உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்ட பாராயணம்.
- அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான்.
இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம். அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது. ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன், மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம்.
"ராமா' என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன். "ராமா' என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.
ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன். அனுமன் மற்றும் சுந்தரகாண்டம் ஆகிய ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். தினமும் அனுமனை வணங்கி, சுந்தரகாண்டத்தின் ஒரு ஸர்க்கத்தைப் படியுங்கள். வாழ்வில் சிரமம் அணுகாது.
அனுமனின் குரு
அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான். அவருக்கு நன்றி கடன் பட்டிருந்த அனுமன், ""தங்களுக்கு குருதட்சணையாக என்ன தர வேண்டும்? என கேட்டார். சூரியன், தன் மகன் சுக்ரீவனுக்கு மந்திரியாக இருந்து அவனை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுடன் இருந்து, சூரியனுக்கு தன் நன்றியை செலுத்தினார்.
அனுமன் பெயர்க்காரணம்
ஒருமுறை குழந்தை அனுமன் வானில் சூரியன் உதயமாவதைப் பார்த்து அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும் அதை பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்ட ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்து கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை "ஹனு' என்பர். எனவே அவர் "ஹனுமான்' ஆனார். தமிழில் "அனுமன்' என்கிறோம்.