ஆன்மிக களஞ்சியம்

பல அற்புதங்கள் நடந்த முதல் தலம்

Published On 2023-08-08 10:16 GMT   |   Update On 2023-08-08 10:16 GMT
  • திருவதிகை திருத்தலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.
  • தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.

திருவதிகை திருத்தலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகப் போகிறது. இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கடைபிடிக்கப்படும் பல செயல்களுக்கு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, திருவதிகை தலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அசுரர்களை அழிக்க சிவ பெருமான் தேரில் ஏறி வந்தார் என்பது வரலாறு. அதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் தேர் செய்து முதல் தேரோட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகே தமிழகத்தில் மற்ற கோவில்களில் தேரோட்டம் நடத்தும் பழக்கம் உருவானது.

தேவாரம், திருவாசகம் பாடல்களை மனம் ஊன்றி படித்தால், நிச்சயம் மனம் உருகும். தேவார பாடல்களை பாடிய திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.

ஆனால் அவர் தேவாரப்பாடல்களை முதன் முதலில் பாடத் தொடங்கியது திருவதிகை தலத்தில்தான். தனக்கு ஏற்பட்ட சூலை நோய் நீங்கியதும் திருநாவுக்கரசர் இத்தலம் ஈசன் மீது முதல் தேவாரப்பாடலைப் பாடினார். இத்தலத்தில் அவர் மொத்தம் 16 பதிகங்கள் பாடினார்.

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சிவாலயங்கள் ஏராளமாக உள்ளன. பல ஆலயங்கள் கவனிப்பாரின்றி சிதிலமடைந்து விட்டன. தற்போது அந்த நிலை மாறி வருகிறது.

பக்தர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக நமது பழமையான ஆலயங்கள் சீரமைக்கப்பட்டு, நித்திய பூஜைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. புண்ணியம் தரும் இந்த சீரிய பணியை செய்வதற்காக தமிழகத்தின் பல ஊர்களில் `உழவாரக் குழு'க்கள் உள்ளன.

இந்த உழ வார பழக்கத்தை மக்கள் மத்தியில் தோற்று வித்தவர் திருநாவுக்கரசர் ஆவார். அவர் திருவதிகை கோவிலில் முதல் உழவார சேவையை செய்தார். அதன் பிறகே மக்கள் சிவாலயங்களைத் தேடிச் சென்று உழவார பணிகளை செய்யத் தொடங்கினார்கள்.

இப்படி தமிழ்நாட்டில் முக்கியமான மூன்று ஆலய சேவை பழக்கத்துக்கு திருவதிகை தலமே வித்திட்டது. இத்தகையை சிறப்பான தலத்தை தமிழ்நாட்டில் பலரும் அறியாமல் இருப்பது உண்மையிலேயே வேதனைக்குரியது.

புண்ணியங்களை குவித்து, முக்தியை தரும் அரியத்தலமாக இந்த தலம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தடவை அங்கு காலடி எடுத்து வைத்தாலே உன்னதமான மாற்றம் ஏற்படும். அதை பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்தாததும் நமது மனதில்தான் இருக்கிறது.

சுவாதி நட்சத்திர தினத்தன்று வழிபட்டால் சுகம் அதிகரிக்கும் திருவதிகை கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் நட்சத்திர அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன. குறிப்பாக சுவாதி நட்சத்திர தினத்தன்று இத்தலத்தில் வழிபாடுகள் செய்வது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

வைகாசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று தான் சிவபெருமான் தேரில் அமர்ந்து இத்தலம் அமைந்துள்ள பகுதிக்கு வந்து மூன்று அசுரர்களை தன் புன்னகையால் சம்ஹாரம் செய்தார். எனவேதான் சுவாதி நட்சத்திர நாட்களில் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் அனைத்து சுகமும் கிடைக்கும் என்கிறார்கள்.

அது போல ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் நட்சத்திர அடிப்படையில் நடக்கும் திருவிழாக்கள் விபரம் வருமாறு:-

சித்திரையில் அப்பர் பெருமானுக்கு சதய பெரு விழா பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும்.

சித்திரை திருவோணம் நட்சத்திரத்தில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் மற்றும் சோடச உபசார மகா தீபாராதனையை அப்பர் தரிசனம் செய்கிறார்.

வைகாசி மூலம் அன்று திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் உற்சவம் நடைபெறும்.

ஆனி மகம் நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகர் மோட்சம் நிகழ்ச்சி நடைபெறும்..

ஆடி மாதம் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு பூரம் நட்சத்திரத்தில் தேர் உற்சவம் நடைபெறும்.

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு மோட்சம் நிகழ்ச்சி நடைபெறும்.

ஆவணி: விநாயகர் சதுர்த்தி பூஜை மற்றும் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

புரட்டாசி: நவராத்திரியில் 9 நாட்களும் மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் துர்க்கை மற்றும் வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

ஐப்பசி: ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னா பிஷேகம் நடைபெறும்.

ஐப்பசி அமாவாசையில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு 108 திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

கார்த்திகை மாதம்: ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

மார்கழி: மாணிக்கவாசகருக்கு 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று திருவாதிரை அன்று ஸ்ரீ நடராஜர் பெருமான் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

தை உத்திரம் அன்று திலகவதியார் மோட்சம், மாணிக்கவாசகர் ஜென்ம நட்சத்திரம் சிறப்பு பூஜை நடைபெறும்.

பங்குனி உத்திரம் நட்சத்திரத்தில் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அன்னை பெரியநாயகி திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

கோவில் தோற்றம்

திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயத்தில் ஆரம்பத்தில் கொன்றை மரத்தடியில் லிங்கம் மட்டுமே இருந்துள்ளது. இந்த லிங்கம் தோன்றியதற்குப் பல விதமான புராணக் காரணங்கள் கூறப்படுகின்றன. ஆதியில் இவ்விடம் கொன்றை வனமாக இருந்துள்ளது.

`தேவர்களும், அசுரர்களும், பார் கடலை கடைந்து அமிர்தம் எடுத்த போது திருமால் அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்காக மோகினி வடிவம் எடுத்தார். தேவர்களுக்கு கொடுத்து விட்டு தானும் உண்டு ஆனந்த பரவசமாய் இந்த கொன்றை வனத்தை வந்து அடைந்தார்.

மோகினி வடிவில் திருமால் கொன்றை வனத்தில் இருப்பதைக் கண்ட பரமேஸ்வரன் அவர் மீது மோகம்கொண்டு அம்மோகினியைக் கூடி மறைந்தார்.

பின் மோகினி வடிவம் நீங்க திருமால் கெடில நதியில் நீராடி சிவபூஜை மேற் கொண்டார். பூஜையில் மனம் நெகிழ்ந்த பரமேஸ்வரன் பூமியை பிளந்து சுயம்பாக லிங்க வடிவாகத் தோன்றி பெண்ணே உன் தவத்தில் மனம் மகிழ்ந்தோம். உனக்கு வேண்டிய வரத்தை கேள் என்று அருளினார்.

அப்போது மோகினி வடிவில் இருந்த திருமால் பரவசம் அடைந்து சுவாமி இப்பெண் உருவம் நீங்கி என் உண்மை உருவம் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினார். திருமாலுக்கு அவரது உண்மை திருஉருவம் கிடைக்கப்பெற்றது.

இது வீரட்டலிங்கம் தோன்றியதற்காக கூறப்படும் புராண கதையாகும். இவ் ஆலயத்தில் உள்ள மூல லிங்கத்தின் தோற்றம் வரலாற்று சான்றாகவோ, கல்வெட்டுச்சான்றாகவோ இன்றளவும் காண முடியாததாக உள்ளது.

Tags:    

Similar News