ஆன்மிக களஞ்சியம்
null

திருவள்ளூர் வீரராகவ பெருமாள்

Published On 2023-08-08 10:21 GMT   |   Update On 2023-08-08 12:12 GMT
  • மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
  • குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.

1. ராவணனை அம்பெய்து கொன்ற ராமனைப் பள்ளி கொண்ட கோலத்தில் காண விரும்புபவர்கள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

2. எவ்வளவு கொடிய பிணியையும் தீர்க்க வீரராகவனைச் சிந்தையில் வைத்துப் பொய்கையில் நீராடி வணங்கினால் எத்தகைய நோயும் தீரும்.

3. இப்பெருமாளை உண்மையான அன்போடும், பக்தியோடும் வணங்குபர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள தொழிலில் மேன்மை அடைவார்கள். உலகை ஆளும் தகுதியும் பெறுவார்கள்.

4. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும், குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது.

5. தை அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

6. கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.

7. ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் ஈக்காடு வேட்டைக்குச் சென்ற பெருமாள் தாயாரை மணமுடித்ததாகத் தலவரலாறு.

8. வீரராகவப் பெருமானை போற்றிப் பாடும் பாட்டுக்கள் வீரராகவர் போற்றி பஞ்சகம் எனப்படும். இப்பாட்டுக்கள் ஐந்தும் வீரராகவப் பெருமானை அருச்சிப்பதற்கு ஏற்றவை.

நேர்த்திக் கடன்கள்

இத்தலத்தில் இந்த நேர்த்திக்கடன் மிகவும் விசேஷமானது. உருவத் தகடுகளை (வெள்ளி, தங்கம்) செய்து போடுதல், தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப்புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.

உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோவில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

அபிஷேகம் இல்லை

மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை கார்த்திகை மாதம் மட்டும் சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது.

தலபெருமை:

தொண்டை மண்டலத்தில் உள்ள வைணவத் தலங்களில் இத்தலம் மிக முக்கிய திவ்ய தேசமாகும். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.

ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது.

மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News