ஆன்மிக களஞ்சியம்

தொள்ளை காது சித்தர்

Published On 2023-07-30 05:45 GMT   |   Update On 2023-07-30 05:45 GMT
  • புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தொள்ளை காது சித்தர் சமாதி உள்ளது.
  • காதில் பெரிய துளை இருந்ததால் தொள்ளை காது சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தொள்ளை காது சித்தர் சமாதி உள்ளது. இவரின் இயற்பெயர் தெரியாது. தாய்,தந்தை யார் என்றும் தெரியவில்லை.

இளம் வயதில் இவர் தந்தையை இழந்தார். தாயார் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். இதை விரும்பாத அவர் தன் குல தெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்போது அவரை அம்மன் அழைப்பது போல் குரல் வந்தது. அந்த வழியே நடந்து வந்தார். புதுவை அருகே உள்ள மொரட்டாண்டி பகுதிக்கு வந்தார். அங்கிருந்து முத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தார்.

அம்மனை வேண்டினார். அம்மனின் தரிசன காட்சியை கண்டார். அவருக்கு ஞானம் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து 5 மைல் தொலைவில் உள்ள புதுவைக்கு வந்தார். கடற்கரை அருகில் மணற்குளத்தின் கடற்கரையில் விநாயகரை வழிபட்டு வந்தார்.

விநாயகரை வழிபட்ட பின்னர் மொரட்டாண்டிக்கு சென்று வந்தார். அங்கு பிரெஞ்சு அதிகாரிகளின் தொல்லை அதிகம் ஆனது. எனவே அங்கிருந்து வெளியேறி புதுவை ஆனந்த ரங்க பிள்ளை தோட்டத்துக்கு வந்தார்.

அங்கு குடில் அமைத்து தங்கினார். அந்த இடம் அவருக்கு அமைதி தந்தது. அவர் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார்.

அவர்கள் குறைகள் கேட்டு தீர்த்துவைத்தார். சித்து வேலைகள் புரிந்தார். அவர் தங்கியிருந்த குடிசையை சித்தன் குடிசை என்று மக்கள் அழைத்தார்கள். இன்று வரை இந்த பகுதி சித்தன் குடிசை என்றே அழைக்கப்படுகிறது. அவரின் காதில் பெரிய துளை இருந்தது. எனவே அவர் தொள்ளை காது சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

தரிசன நேரம்

காலை 5.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை

விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரத்தில் மாற்றம் ஏற்படும்

தங்கத்தேர்

மணக்குள விநாயகர் கோவிலில் அழகான தங்கத்தேர் ஒன்று உள்ளது. பக்தர்களின் நன்கொடையால் இது உருவாக்கப்பட்டது.

தேர் செய்ய பயன்படுத்திய தங்கத்தின் மொத்த எடை 7.5 கிலோ

மதிப்பீடு-ரூ.35 லட்சம், தேரின் உயரம்-10 அடி, அகலம்-6 அடி

தங்கத்தேர் உருவாக்கி பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு-2006.

பவனிவரும் காலம்- ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று மேள தாளங்களுடன் ஊர்வலம் நடைபெறும்

குளத்தின் மீது விநாயகர்

மணக்குள விநாயகர்கோவிலில் மூலவர் ஒரு குளத்தின் மீது அமர்ந்திருக்கிறார். பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்கிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இதில் எப்போதும் வற்றாத நீர் உள்ளது.

Tags:    

Similar News