திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில்
- திருக்கருகாவூர் பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும்.
- முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவிலும் அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் திருக்கருனாவூர் தலம் உள்ளது.
சுவாமி : கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவி வனேசுவரர்
அம்பிகை : கருக்காத்த நாயகி, கர்ப்பரட்சாம்பிகை
தலமரம் : முல்லை
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், விருத்த காவிரி, திருப்பாற்குளம்.
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் -1
பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும். பஞ்ச ஆரண்யதல வழிபாட்டை செய்பவர்கள் முதன் முதலில் இத்தலத்தில் இருந்து தான் வழிபாட்டை தொடங்கவேண்டும்.
இத்தலம் நன்மகப்பேறு வாய்த்தற்குரிய பிரார்த்தனைத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். இத்தலத்திற்கு முல்லைவனம், மாதவி வனம், கர்ப்பபுரி என்பன போன்ற பெயர்களும் உண்டு.
சிவபெருமான் உமாதேவியுடனும், முருகனுடனும் இருக்கும் திருக்கோலத்தை சோமஸ்கந்தர் அருட்கோலம் என்பவர்கள். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும்.
இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்காக ஒரு கோபுரமும், தெற்காக மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது.
கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாக தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடியின் வடு இருப்பதை காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.
இங்கு கௌதமேசர் என்னும் தனிக் கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி விடங்க மூர்த்தமாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், இரட்டை நந்தி, இரண்டு பலி பீடங்கள், அறுபத்து மூவர், சந்தானாசாரியார்கள், முருகர், கஜலட்சுமி, நிருத்துவ முனிவர் பூசித்த லிங்கம், நவக்கிரகம், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.
திருக்கருகாவூர் கர்ப்பத்தை ரட்சிக்கும் அம்பிகை கருத்தரிக்கும் பெண்களுக்கு தங்களுக்குப் பிரசவம் நல்லபடியாக ஆகவேண்டும், இடையில் எந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும்.
அந்த பயத்தைப் போக்கி, கர்ப்பத்தை ரட்சித்து, சுகப்பிரசவம் ஆக்கிக் கருணைமழை பொழிகிறாள் கர்ப்பரட்சாம்பிகை.
ஆலயம் அமைந்திருக்கும் இந்தப் பகுதி ஒரு காலத்தில் முல்லைக்கொடிகள் நிரம்பிய வனப்பகுதியாக இருந்தது. இங்கே சுயம்புவாகத் தோன்றிய ஈசன், முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் `மாதவி' என்றால் முல்லை என்று அர்த்தம். எனவே, மாதவிவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் புற்று மண்ணில் தானாகத் தோன்றியவர் என்பதால் முல்லைவனநாதருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துவார்கள்.
இவருக்குப் புனுகு சாத்தினால் தீராத தோல் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
அவருக்கு எதிரே கர்ப்பக விநாயகர் (கற்பக?) சுயம்பு நந்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, முருகன், பிரம்மன், மகிஷாசுரமர்த்தினி, சண்டீசர் ஆகியோரும் இந்த சிவாலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.
சுவாமி கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் நந்தவனம் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் இக்கோயில் அமைந்திருக்கிறது.
பத்மபீடத்தில், அமைதியே உருவாக அன்னை எழுந் தருளி இருக்கிறாள். லேசான புன்னகை வேறு. அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவளது வயிற்றின் கீழே தொடுவது போல் உள்ளது. கர்ப்பத்தை ரட்சிக்கும் கோலம் போலும்! பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது.
மறு கரம், அபயம் அளிக்கிறது. மேல் நோக்கி உயர்த்திய மூன்றாவது கரம் அக்கமாலையையும், அடுத்த கரம் தாமரையையும் தரித்துள்ளன.
கர்ப்பரட்சாம்பிகையை ஒரு தடவை பார்த்தாலே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற உணர்வு, நம்பிக்கை, பார்க்கும் பக்தர்களுக்கெல்லாம் ஏற்படுகிறது.
இவள் கர்ப்பத்தை ரட்சிப்பவள் சரி, திருமணமே ஆகாதவர்களுக்கு? அதற்கும் இவளிடம் மருந்து இருக்கிறது. திருமணம் கூடிவராத பெண்கள், அன்னையின் சன்னதியில் நெய்யினால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவருவதாகச் சொல்கிறார்கள்.
மகப்பேறு இல்லாதவர்கள், 48 நாட்கள் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும் என்றும் சுகப்பிரசவம் ஆக அம்பாள் பிரசாதமான விளக்கெண்ணெயை நம்பிக்கையுடன் தடவி வந்தாலே போதும் என்று பலன் அடைந்தவர்கள் சொல்கிறார்கள்.
திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற புண்ணியத்தலம் இது. பிரம்மன், கவுதமர் ஆகியோர் இங்கே தங்கி இறைவனை பூஜித்திருக்கிறார்கள். அம்மன் கோயில் அருகில் இருக்கும் கவுதம லிங்கத்தை நிறுவியவர் கவுதம முனிவரே என்கிறது புராணம்.
இந்தத் திருக்கருகாவூர் ஆலயத்தில் நவகிரகங்கள் எல்லாம் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன. சூரியனைச் சுற்றி மற்ற எல்லா கிரகங்களும் சூரியனையே பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் அபய வரத முத்திரையுடன் காட்சி தருவதும் சிறப்பானது.
பிரதோஷம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி போன்ற தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு உண்டு. ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள ஷீரகுண்டம் என்னும் பால் குளத்தில் சிவராத்திரி அன்று ஈசன், தீர்த்தமாடுகிறார். இந்தக் குளம், காமதேனுவின் கால் குளம்பால் ஏற்படுத்தப்பட்டதாகும்.