- உட்பிரகாரநாத மண்டபத்தில் சப்தஸ்வர தூண்கள் அமைந்துள்ளன.
- பாதாள ஈஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.
திருப்பட்டூர் பிரம்மபுரிசுவரர் கோவில் முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டதாகும். கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் 2-ம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
அதாவது 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இங்கு நாயக்கர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
சுமார் 5 ஏக்கர் பரப்பளவி இத்தலம் பிரமாண்டமாக காணப்படுகிறது. இத்திருக்கோவிலின் முன்பு நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது. கொடி மரம், பலி பீடம் தொடர்ந்து நந்தி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி அளிக்கிறார்.
அதனைத்தொடர்ந்து உள்ள உட்பிரகாரநாத மண்டபத்தில் சப்தஸ்வர தூண்கள் அமைந்துள்ளன. கருவறையில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். உளிபடாத சிவலிங்க திருமேனி, மேலே தாராபாத்திரம், நாக ஆபரணத்துடன் கூடிய சதுர வடிவில் ஆவுடை கூடிய திருமேனியில் பிரம்மபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார்.
சுற்றுப்பிரகார மண்டபங்களில் பரிவார ஆலயங்கள் உள்ளன. அதில் தென்புறம் பதஞ்சலி முனிவர் திருவுருவம் உள்ளது. அவர் யோக சூத்திரம் அருளிய பதஞ்சலியாவார்.
அங்குள்ள தியான மண்டபத்தின் வடபுறம் நோக்கி சப்த கன்னிமார் உள்ளனர். இதில் விநாயகர் மற்றும் வீரபத்திரரும் இடம் பிடித்துள்ளனர்.
மேல் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கற்பக விநாயகரும், அடுத்த பிரம்மன் வழிபட்ட லிங்கங்களில் ஒன்றான பழமலை நாதரும் உள்ளனர். அடுத்தது கந்தபுரீஸ்வரரும், அடுத்து மயிலில் சிவகுகன் சண்முகநாதரும் உள்ளனர்.
அடுத்து சுதையால் உருவான கஜலட்சுமி, அதற்கடுத்து சிற்பத்தால் ஆன கஜலட்சுமி அருள்புரிகிறார்கள். வடபுற திருச்சுற்றில் பிரம்மன் வழிபட்ட லிங்கங்களில் ஒன்றான பாதாள ஈஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.
சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று. திருச்சுற்று முக மண்டபத்தின் வடதிசையில் மேற்கு நோக்கியவாறு கால பைரவர் உள்ளார்.
அவர் இப்பகுதி மக்களுக்கு நோய் தீர்க்கும் வைத்தியரை போல உதவுகிறார். கிராம மக்களுக்கு எவ்வித நோய் ஏற்பட்டாலும், காலபைரவர் சந்நிதி விபூதி அதை குணப்படுத்தி விடுவதாக இப்பகுதி மக்கள் இன்றும் உறுதியாக நம்புகின்றனர்.
சூரிய பகவானும் உள்ளனர். கருவறை தேவ கோட்டங்களில் தென் புறம் நர்த்தன கணபதியும், ஞான தட்சிணாமூர்த்தியும், மேல்புறம் மகா விஷ்ணுவும், வடபுறம் துர்க்கையும் அருள்பாலிக்கிறார்கள். முன்மண்டபத்தின் வடகிழக்கில் நவகிரகங்களும், அடுத்து வடகிழக்கு மூலையில் பிரம்மன் வழிபட்ட லிங்கங்களில் ஒன்றான சுத்தரத்தினேஸ்வரரும் உள்ளனர்.
பிரம்மன் வழிபட்ட சோடச லிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது. வியாக்ரபாதரும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.
அருள்மிகு பிரம்ம சம்பத்கவுரியின் சன்னதி கொடி மரத்தின் வடபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. பிரம்மன் வழிபட்ட அம்பிகை பிரம்மனுடைய சம்பத்தாகிய தேஜசை திரும்ப வழங்கியதால் அழகின் வடிவமாக கருணையே கண்களின் சாட்சியாக பிரம்ம சம்பத் கவுரி அருள்புரிகிறார்.
அம்மன் சன்னதி வாயிலின் தென்புறம் பிரம்மன் வழிபட்ட லிங்கங்களின் ஒன்றான தாயுமானவர் உள்ளார். அம்மன் கோவிலை தரிசிக்க சுற்றுப்பிரகாரம் உள்ளது. அம்மன் கோவிலுக்கு வடக்கே பிரம்ம தீர்த்தமும், நந்தவனமும் உள்ளது.
நந்தவனத்தில் பிரம்மன் வழிபட்ட பிற சிவ லிங்கங்கள் எங்கும் ஈஸ்வர மயமாய் மாண்டூக நாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாச் சலேஸ்வரர், சைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தி நாதர், சப்தரிஷீஸ்வரர் வீற்றி ருக்கிறார்கள்.
அம்பாள் பிரம்ம நாயகியின் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. அம்பாள் கோவில் அடுத்துள்ள வடக்கு பிரகாரத்தில் கைலாசநாதர் கோவில் கல்தேர் வடிவில் அமைந்துள்ளது. எதிரே ஒரே கல்லால் ஆன பெரிய நந்தி உள்ளது. இந்த கைலாசநாதர் கோவிலை சுற்றி பல சிவலிங்க சந்நிதிகள் உள்ளன.
இத்தலத்தில் பங்குனி மாதத்தில் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை நிகழ்கிறது. இவ்வாலயத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது. கருவறைக்கும், ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கும் இடையே சுமார் 100 மீட்டர் (அதாவது 300 அடி) இடைவெளி உள்ளது.
இடையில் 7 நிலைப்படிகள் உள்ளன. இந்த 7 வாசல்களையும் கடந்து இறைவன் கருவறையில் எப்போதும் இயற்கை வெளிச்சம் காணப்படுவது மிக அரிதான காட்சியாகும். எந்த விளக்கொளியும் இல்லாமலேயே சிவலிங்கத்தை பளிச்சென்று தரிசிக்கும் வாய்ப்பு இக்கோவிலில் மட்டுமே உள்ளது என்பது தனிச்சிறப்பு.
தலையெழுத்தை மாற்றும் சக்தி
வான சாஸ்திரப்படி நமது பிறப்பின் அடையாள அட்டை யாக கருதப்படுவது தான் ஜாதகம். நாம் பிறந்த நேரம், ஊர், தேதி, ராசி, நட்சத்திரம் உள்ளிட்ட விபரங் களை உள்ளடக்கியது என்றும் கூறலாம். இதன் மூலம் நமது எதிர்கால பலன்களை ஓரளவு முடிவு செய்ய முடியும்.
குறிப்பாக கல்வி, திருமணம், பொருளாதார நிலை, ஆயுள் உள்ளிட்ட விபரங்களை கால, கிரக சூழ்நிலைக்கு ஏற்ப நடப்பு ஆண்டு கணிப்பு, செவ்வாய் தோஷ பகுப்பாய்வு, ஏழரை சனி, கிரகங்களின் கோச்சார பலன்கள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
அவ்வாறான ஜாதகத்தை இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மனின் பாதங்களில் வைத்து வழிபட வேண்டும். நம் கொடுக்கும் ஜாதகம் மீது சுவாமிக்கு சாற்றப்பட்ட மஞ்சள் பூசி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பக்தர்களின் ஜாதகப்படி அவர்களின் தலையெழுத்தும் மாறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.