ஆன்மிக களஞ்சியம்

விநாயகர் சில சுவையான தகவல்கள்

Published On 2023-06-24 10:58 GMT   |   Update On 2023-06-24 10:58 GMT
  • பரப்பிரும்ம சொரூபமாயிருப்பவன் கணபதி. மோட்சத்திற்கும் அவனே தலைவன்.
  • இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

விநாயகர் பெயர் விளக்கம்

"வி " என்றால் "இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது , "ஓம் அநீஸ்வராய நம" என்பர். "அநீஸ்வராய" என்றால் தனக்கு மேல் ஒரு ஈஸ்வரனே இல்லை என்று பொருள்.

கணபதி என்பது...

கணபதி எனும் சொல்லில் "க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது. "ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. "பதி " என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது. பரப்பிரும்ம சொரூபமாயிருப்பவன் கணபதி. மோட்சத்திற்கும் அவனே தலைவன்.

விநாயக வடிவ விளக்கம்

யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யானை அக்ரிணைப் பொருள், மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை, உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.

விநாயகரிடம் ஏன் இருக்கிறது?

விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்களிருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம் ஆகியவை இருக்கும். புனித நீர்க்குடம் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்துக் களைத்துத் தன்னைச் சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பைப் போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார். அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. இவரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால்தான் முகம் யானை வடிவில் இருக்கிறது. பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளைக் கட்டிப் போடுகிறார். ஒடித்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதைக் காட்டுகிறது.

நவக்கிரகப் பிள்ளையார்

ஓங்கார நாயகனாய் திகழும் பிள்ளையாரின் உடலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரது நெற்றியில் சூரியனும், நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் பகவானும், வலது கீழ் கையில் புதனும் கொலு வீற்றிருக்கிறார்கள். வலது மேல் கையில் சனியும் , சிரசில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்கிரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இருக்கிறார்களாம்.

பெண் விநாயகர்

விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

அரசமரத்தடி ஏன்?

அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் காற்று பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக் கூடியது. எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலிருப்பவர்களும் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தைச் சுற்றிப் பிள்ளையாரை வணங்கிச் செல்கிறார்கள்.

விநாயகரும் அவருக்கேற்ற மரங்களும்

விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார். இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரைப் பிரதிஷ்டை செய்யலாம். இந்த ஐந்து மரங்களும் பஞ்சபூதத் தத்துவத்தை விளக்குகிறது. அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும். இந்த ஐந்து மரங்களும் விநாயகர் கோவிலில் நடப்பட்டால் அது முழுமை பெற்ற கோவிலாக இருக்கும்.

விநாயகருக்கு உகந்த இலைகள்

முல்லை, எருக்கு இலை, கரிசலாங்கண்ணி, மருத இலை, வில்வம், விஷ்னு கிரந்தி, ஊமத்தை, மாதுளை, இலந்தை, தேவதாரு, வெள்ளை அருகம்புல், மருவு, வன்னி, அரசு, நாயுருவி, ஜாதி மல்லிகை, கண்டங்கத்தரி, தாழை, அரளி, அகத்தி இவற்றின் இலைகளைக் கொண்டும் அர்ச்சிக்கலாம்.

Tags:    

Similar News

கருட வசனம்