ஆன்மிக களஞ்சியம்
null

ஆன்மீக இலக்கியங்களில் திருவேற்காடு

Published On 2023-05-26 12:15 GMT   |   Update On 2023-05-26 12:19 GMT
  • திருவேற்காட்டுத் தலத்தினில் தனிப்பெரும் கருணையோடு, புன்னகை தவழும் முகத்தோடு அவள் வீற்றிருக்கிறாள்.
  • அன்னை கருமாரி கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்! மஞ்சளால் மகிமை புரிபவள்! எலுமிச்சம் பழத்தில் அதிசயம் காட்டுபவள்!

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு அதில் முதலாம் திருமுறையை அருளியவர் திருஞான சம்பந்தப் பெருமான். பதினொரு இன்சுவைப் பாக்களால் திருவேற்காட்டைப் பாடுகிறார். அதில் உறையும் வேதபுரீசனைப் பாடுகிறார்.

1. உயரிய பரம்பொருளை நினைப்பவரே தேவர். அவருக்கு நற்கதியை அளிப்பவன் வெள்ளிமலையான். அவன் விரும்பி உறையும் இடம் வேற்காடு.

அன்னை கருமாரியின் அருள் வரலாறு

தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்த தாய் தான் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத் தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் தந்தையிடமிருந்து பெறுவதே குழந்தையின் இயல்பு.

அதேபோல் ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலா பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் காட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.

திருவேற்காட்டுத் தலத்தினில் தனிப்பெரும் கருணையோடு, புன்னகை தவழும் முகத்தோடு அவள் வீற்றிருக்கிறாள்.

உடுக்கை ஏந்திய கரம் ஒன்று

திரிசூலம் தாங்கிய கரம் மற்றொன்று

வாள் தாங்கிய வளைக்கரம் இன்னொன்று

பொற்கிண்ணம் ஏந்திய பூங்கரம் வேறொன்டு

நாற்கரத்து நாயகி! சிவசக்தியாய் அமர்ந்த நிலையில் ஒரு திருக்கோலம்!

தலைகாட்டி உடல் மறைந்த நாரணியாய் மற்றொரு கோலம்.

வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் தேவி! அனைத்து துன்பங்களையும் வேரறுக்கும் அனந்த நாயகி!

ஆயிரம் கண்ணுடையாள்!

ஆதிபராசக்தி

வேற்காட்டுக் கருமாரி

கண்ணின் கருமணி போன்றவள்

ஒரே ஒரு முறை தன்னிடம் அடைக்கலம் வந்தோரையும் ஆதரிப்பவள். வளமான வாழ்வளிப்பவள். சகல செல்வங்களும் தரும் தயாபரி. அகிலமதிலே நோயின்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, வாழ்நாள், வெற்றி, தீமை கழித்து நல்லூழ் நாட்டுதல், நுகர்ச்சி ஆகிய பதினாறு பேறும் கண்சிமிட்டும் நேரத்தில் அருள்பவள்.

பாமரர்களின் பரிபூரண நம்பிக்கை!

படித்தவர்களின் பரம்பொருள் நாயகி!

பதவியில் இருப்பவர்க்குப் பரதேவதை!

செல்வாக்கு உள்ளவர்களுக்கு அஷ்டலட்சுமி!

கிராம மக்களுக்குக் குலதெய்வம்

நகர மக்களுக்கு பிரும்மாண்ட நாயகி!

அனைத்து மக்களுக்கும் அன்புத்தாய்

அகில உலகுக்கும் ஆதிபராசக்தி!

ஏழை பணக்காரன் முதல் படித்தவன், பாமரன் ஈராறாக அவள் பதம் காண ஓடிவருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நித்தில் நாயகி!

அந்த அன்னையின் வடிவழகு! அதை ஆண்டாண்டு காலமாய் பாடிய பாவலர் கோடானு கோடி!

மனிதரும், தேவரும், மாயமா முனிவரும் வந்து சென்னி

குனிதரும் சேவடிக் கோமளேமே! கொன்றை வார்சடைமேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயுமென் புந்தி என்னாளும் பொருந்துக

என்று நமது அபிராமிப் பட்டரை போல் பாடிப்பரவியோர் பலபேர்!

நமது அன்னையை மனிதர்கள் போற்றுவார்களாம். தேவர்கள் ஏத்துவார்களாம். மாயம் செய்யும் மாமுனிவர் பணிவார்களாம். சென்னியைக் குனித்துச் சேவடி தொழுவார்களாம். அந்த கோமளவல்லி அன்னை பராசக்தியை! கொன்றைப்பூவை வரிச்சடைகளில் சூடியவர் மனேஸ்வரன். பனிபொருந்திய குளிர்தரும் நிலவை அந்த வார்சடைகளில் பொருத்தி வைத்தவர். அதுமட்டுமா? பாம்பை மலராகச் சூடியவர். பகீரதியை தலைமேல் சுமந்தவர். அந்த தயாநிதி உடனுறை தாயாகிய அவளை என்னாளும் என் நினைவில் பொருந்துகவே என்று வேண்டி உருகுவோர் எண்ணற்ற பேர்.

அன்னை கருமாரி கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்! மஞ்சளால் மகிமை புரிபவள்! எலுமிச்சம் பழத்தில் அதிசயம் காட்டுபவள்! வேப்பிலை தன்னிலே வெப்புநோய் தணிப்பவளே! சாம்பலிலே உயிர்காப்பவள்!

எண்ணும் எழுத்தும் இருகரமாய்க் கொண்டவள்! பண்ணை பாடும் போது பூரிப்பவள்! பரதத்தை ஆடும்போது புன்னகைப்பவள்! பைந்தமிழ் கேட்டு இன்புறுபவள்! நண்ணும்போது நயந்து அருள்பவள்! விண்ணும் மண்ணும் வாழ்த்திடும் வித்தகி! திருவேற்காட்டு வேற்கண்ணி!

இதைத்தான் அருட்கவி கருமாரிதாசர்

எண்ணும் எழுத்தும் இருக்கையாய்க் கொண்டிடும் ஏந்திழையே

பண்ணும் பரதமும் பைந்தமிழ்ப் பாடலும் பாடிடவே

நண்ணும் பொழுதில் நயந்தருள் செய்கரு மாரியளே

விண்ணும் உலகமும் வாழ்ந்திடும் வித்தகி வேற்கண்ணியே

என்ற பாடி மகிழ்கிறார்.

அந்த வேற்கண்ணியை-வேற்காட்டு மாரியை முழுதும் அறிந்தவள் யாருளர்?

அன்னவளுக்கு வரலாறு உண்டோ?

புராணம் இருக்கிறதோ?

சில மதியீனர்கள் சொல்வார்கள்- மாரிக்கு ஏது புராணம்? குறி சொல்லும் குறத்திதானே அவள்? எல்லை காக்கும் காளி தானே அவள்? ஊரைக் காக்கும் படாரிதானே அவள்? என்று!

அறியாமையால் கேட்கப்படும் கேள்வி! வேதமந்திரங்களே அவள் பெயரை முழங்குகின்றன. ஸ்ரீகிருஷ்ணமாரி என்ற அட்சரங்களால் வழங்குகின்றன.

கருணையை மாரிபோல் பொழிபவள்

கருமாரி என்னும் திருநாமம் கொண்டவள்

நாற்கரம் தாங்கிய நாயகி! நற்கதியளிக்கும் நாரணி! ஐந்து பூதங்களுக்கு அப்பாற்பட்டவள்! பஞ்சாட்சரி! ஆறுமுகனுக்கு வேலைத் தந்த அன்னை பரமேஸ்வரி!

யோகம், ஞானம், வேதங்களுக்கு எட்டாதவள்! ஏங்குவோர்க்கு ஏக்கம் தீர்க்கும் அருமருந்து!

வேதங்கள் அறிய முடியாத வித்தகி! வேப்பிலையை விரும்பிச் சூடியவள்! உடுக்கையலி கேட்டு ஓடிவருபவள்! கேட்க வரம் தந்த நம்மைக் காத்து இரட்சிப்பவள்!

அந்த அன்னையின் வரலாற்றை அன்பு மனத்தோடு படியுங்கள்! உங்கள் கலி நீங்கி வளம் ஓங்கும்.

கருமாரி பெயர் காரணம்

மாரி என்றால் மழை.

மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே என்று குறிஞ்சிக் கபிலர் பாடுவார்.

கருமாரி என்றால் கருமையான மேகம் எனப்பொருள் கொள்ளலாம்.

உயிர்கள் வாடுவதைக் கண்டு கருமாரி பொழியும். இது விண்மாரி! அதேபோல் அடியவர் வாட்டத்தை கண்டு அன்னை அருள்மாரி பொழிவாள்! இது மண் மாரி! மண்ணுலகைக் காக்கும் மகாமாரி!

அன்னை ஆயிரங் கண்ணுடையாள்! கோடி கோடி வடிவங்களில் தோன்றுபவள்! அவ்வடிங்களில் ஒன்பது வடிவங்கள் சிறப்புடையவை! அவ்வடிவங்களில் ஒன்று குளிர் மாரி வடிவம். அவள் சன்னதியின் முதல் படியில் கால் வைக்கும் போதே மனம் குளிரும். மதிகுளிரும். பிறந்த வீட்டில் நுழையும் பெண்ணைப் போல தாய் வீட்டுக் கருணை நெஞ்சில் நிறையும்.

துர்க்கை, மகாகாளி, மகாலட்சுமி முதலான அன்னையின் அம்சம் தான் கருமாரி! ஆதிபராசக்தி, மகிஷா சூரமர்த்தினி ஆகிய சொருபங்களின் மூலம் தான் கருமாரி!

Tags:    

Similar News