ஆன்மிக களஞ்சியம்

அகத்தியர் காட்டிய அர்க்கவனம்

Published On 2024-02-01 12:05 GMT   |   Update On 2024-02-01 12:05 GMT
  • பிரமதேவர் கூறிய வண்ணம் நவநாயகர்கள் பூலோகத்தை அடைந்து அர்க்கவனத்தைத் தேடி வந்து கொண்டிருந்தனர்.
  • அவர்கள் அர்க்கவனத்தை அடைந்ததும் காவிரியில் நீராடி பிராணநாதரையும், மங்கல நாயகியையும் வழிபட்டனர்.

பிரமதேவர் கூறிய வண்ணம் நவநாயகர்கள் பூலோகத்தை அடைந்து பரத கண்டத்தின் தென் பகுதியான தமிழ்நாட்டில் காவிரி நதியின் வடகரை வழியாக அர்க்கவனத்தைத் தேடி வந்து கொண்டிருந்தனர்.

தமக்கு முன்னே அவ்வழியில் அகத்தியர் செல்வதை கண்டு விரைந்து நடந்து அவரிடம் அணுகி வணங்கினார்கள்.

தமக்கு நேர்ந்த சாப வரலாற்றைக் கூறி, "அர்க்கவனத்தைத் தேடுகிறோம். அது உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும்" என்றார்கள்.

அகத்தியர் அவர்களைப் பார்த்து, "நாமும் அர்க்கவனத்திற்குத்தான் செல்கிறோம்.

அங்கே பிராண நாதரை வழிபடச் செல்கிறோம்.

அவ்வனத்திற்கு உங்களையும் அழைத்துப் போகிறோம். வாருங்கள்" என்று அழைத்து சென்றார்.

அவர்கள் அர்க்கவனத்தை அடைந்ததும் காவிரியில் நீராடி பிராண நாதரையும், மங்கல நாயகியையும் வழிபட்டனர்.

பிராண நாதரை அகத்தியர் வழிபடும் போது, அவர் தமது குறுங்கையை காவிரியாறு வரை நெடுங்கையாக நீட்டி நீரை முகந்து மீண்டும் குறுங்கையாகச் சுருக்கி அந்த நீரால் அபிஷேகம் செய்தார்.

இந்த அற்புதத்தை நவக்கிரகங்கள் கண்டு அகத்தியரின் தவச்சிறப்பை நினைத்து நினைத்து விம்மிதம் உற்றனர்.

இந்த நேரத்தில் காலவ முனிவரைப் பற்ற வேண்டிய தொழுநோய், பிரமனது சாபத்தால் நவக்கிரகர்களைப் பற்றியது.

அவர்கள் அங்கமெலாம் குறைந்து அழுகிவருந்தி அகத்தியரை நோக்கித் தாங்கள் தவம் செய்ய வேண்டிய முறையை அறிவித்து அருளுமாறு வேண்டினர்.

அகத்தியர், நவக்கிரகர்களின் துயர நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார்.

அவர்கள் தவம் செய்ய வேண்டிய முறையை விளக்கத் தொடங்கினார்.

"நவக்கிரகர்களே! நீங்கள் தவம் செய்வதற்கு இந்த அர்க்க வனத்தின் வடகிழக்குப் பகுதியைத் தேர்ந்து கொள்ளுங்கள்.

அங்கு விநாயகரைப் பிரதிட்டை செய்து, தவம் விக்கினமில்லாமல் முடியப் பிரார்த்தனை செய்து கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு தொடங்கி எழுபத்தெட்டு நாட்கள் கடுமையான நோன்பு மேற்கொண்டு தவம் செய்யுங்கள்.

பிரமன் கூறியபடி திங்கட்கிழமையன்று காவிரியில் நீராடிப் பிராணநாதரை வழிபட்டு எருக்கிலைகளில் தயிரன்னம் வைத்துப் புசியுங்கள்.

தவமிருக்கும்போது மனங்களை ஒருநிலைப்படுத்திப் பிராண நாதரைத் தியானம் பண்ணுங்கள்.

இந்த அர்க்கவனத்தில் உள்ள ஒன்பது தீர்த்தங்களையும், ஒவ்வொருவரும் ஒரு தீர்த்தமாகத் தேர்ந்து கொண்டு நாள்தோறும் அதில் நீராடுவீராக" என்று அகத்தியர் விவரம் கூறினார்.

Tags:    

Similar News