பஞ்சபூத ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை!
- வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.
- சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.
பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை.
அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும், அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.
இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோயில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும்.
அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் ஆகிய தென்னிந்தியாவில் உள்ள கோயில்களுக்கு சென்று நாம் வழிபடலாம்.
இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.
பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.
இதற்கு திருச்சியில் இருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரெயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.