ஆன்மிக களஞ்சியம்

திருக்காளத்தி பெயர் வந்தது எப்படி?

Published On 2023-07-25 10:22 GMT   |   Update On 2023-07-25 10:22 GMT
  • பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி.
  • மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும்.

திருக்காளத்தி என்று இத்தலத்துக்கு பெயர் வந்தது மிகவும் சுவை ததும்பும் வரலாறு ஆகும். இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அருகே சிலந்தி ஒன்று வலையைப் பின்னி இருந்தது. இது சிவலிங்கத்திற்கு ஒரு பந்தலைப் போல காட்சியளித்தது.

தீப்பட்டு அந்த பந்தலானது அறுந்துப் போகாத வகையில் அவ்வப்போது பந்தலினை அந்த சிலந்தி புதுப்பித்துக் கொண்டே அந்த சிலந்தி செய்து வந்தது.

ஆனாலும் ஒரு சமயத்தில் சிலந்தி அமைத்திருந்த பந்தல் தீக்கு இரையாகியது. ஆனாலும் சிலந்தி அதிலிருந்து மீண்டது. பிறகு முக்தி பெற்றது.

அதே காலக்கட்டத்தில் காளன் என்கிற நாகம் ஒன்று இருந்தது. இது யாரையும் கடிப்பது கிடையாது. இது நதமது நஞ்சினை வீணாகாது காத்து அதனை நாகமணியாக திரளச் செய்தது. இந்த நாகமணியை சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்துத் திருப்பணியை மேற்கொண்டு வந்தது.

அங்கே அந்தி என்கின்ற சிவகணத் தலைவர் ஒருவன் யானையாக அவதாரம் செய்திருந்தான். இந்த யானை பொன் முகலியை கொண்டு வந்து திருக்காளத்தியப்பனுக்கு தம்முடைய துதிக்கையினால் திருமஞ்சனம் செய்து வந்தது. அதோடு பூவையும் சூட்டி மகிழ்ந்துது வந்தது. இது தூய வழிபாட்டு முறையாக காளன் என்கிற பாம்பிற்கு தோன்றவில்லை.

இதனால் நாகத்திற்கு கோபம் உண்டானது. ஒருநாள் யானையின் துதிக்கையில் நுழைந்து அதற்கு துன்பத்தினை தந்தது. இதனால் கோபம் கொண்ட யானை பாம்பினை சுற்றி தரையிலே அடித்துக் கொன்றது. ஆனால் பாம்பு அதனை தீண்டியபோது இருந்த விஷமானது யானையையும் கொன்று போட்டது. இதையடுத்து அந்த யானை, பாம்பு இரண்டும் முக்தி அடைந்து பெருமை பெற்றன.

சிலந்தி, யானை, பாம்பு ஆகிய மூன்றும் முக்தி பெற்ற தலம் என்பதினால் இது சீகாளத்தித் தலமானது சீ என்பது சிலந்தியையும் காளன் என்பது பாம்பையும், அந்தி என்பது யானையையும் குறித்து வரும் சொல்லாகும். இத்தலத்தின் பெயர் இவ்வகையிலேயே உருவானது. இதனால் இந்த தலத்தினை வணங்குகின்றவர்கள் வீடுபேற்றினை அடைவார்கள்.

கோவில் அமைப்பு

ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது. இவற்றிலே கோவில் வரலாறு மற்றும் திருப்பணி செய்யப்பட்ட செய்திகளை காணலாம்.

இங்குள்ள வாயில் மாடத்திலே கணபதியும், முருகனும் காட்சி தருகின்றார்கள். இதனையடுத்து விசுவநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும் காணப்படுகின்றது.

இதனையடுத்து தேவிமாடம் ஒன்று காணப்படுகின்றது.இங்குள்ள மற்றொரு முக்கியமான சந்நிதி பால கணகம்பாள் சந்நிதியாகும். பாலா என்பது அம்பிகையின் பெயராகும். பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி ஆவாள். இவ்விரண்டு பெயர்களும் சேர்ந்தே பாலகணகம்பாள் என்று அழைக்கப்பட்டது.

இவர் வாயிலிலேயே கொலுவீற்றிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இதற்கு காரணம் இவள் ஆவுடையாரிடம் கோபம் கொண்டு இவ்வாறு தவமியற்றுகின்றாள் என்று கூறுவார்கள்.

இதையடுத்து பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. மேற்கு பகுதி இக்கோவிலிலே முடிகின்றது. இதனை அடுத்து மண்டபம் காணப்படுகின்றது.

தெற்குப்புற பெருவழியில் ஒரு மேடைக் கோவில் உள்ளது. இந்த மேடைக் கோவிலில் சிவலிங்கம், கணபதி, பைரவர் உள்ளனர். இவை வலதுபுறமாக அமைந்துள்ளது.

இடதுபுறமாக சுவற்றிலே துளை போட்டுள்ளனர். அந்த துளையில் நாம் பார்க்கின்றபோது நந்தி பெருமானை பார்க்க முடிகின்றது. இதற்கு பிறகு மேடைக் கோவிலில் நாம் சோமநாதர் மற்றும் மீனாட்சியம்மை சந்நிதிகளை பார்க்கலாம்.

இதற்கு அடுத்தப்படியாக மயில்வாகனன் காணப்படுகின்றார். பிறகு நாம் பொன்முகலியை அடையக்கூடிய வாயிற்படியை பார்க்கலாம். இங்கு தமிழிலே அர்ச்சனை நடைபெறுகின்றது.

ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த கோவிலுக்கு பல அறப்பணிகளைச் செய்துள்ளார். இவருடைய சிலையானது இங்கே வைக்கப்பட்டுள்ளது.

இவருடைய இச்சந்நிதியை அடுத்து நாம் காண்பது சூரியநாராயண சுவாமி கோவில் ஆகும். இங்கு தலவிருட்சம் உள்ள பகுதியாக இது விளங்குகின்றது.

இங்கு பாம்புப பிரதிஷ்டைகள் அதிகம் உள்ளன. இங்கு மகிழமரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கல்லால மரமும், வில்வ மரமும் ஆகும்.

இதனையடுத்து நாம் பார்த்தால் பொன் முகலியாறு ஓடுவதைக் காணலாம். இது மற்றொரு பாலாறு எனக் கூறப்படுகின்றது. இந்த ஆற்றங்கரையில்தான் கண்ணப்பர் நடந்து வந்து இறைவனை வணங்கியதாக கூறுகின்றார்கள்.

பொன்முகலி ஆற்றங்கரைக்கு நாம் வந்து விட்டால் கண்ணப்பரை வணங்காமல் போகக்கூடாது. இந்த பொன்முகலி ஆறே புனிதக் கங்கையாக ஆகியது. இங்கு பல ஈஸ்வர அருளாளர்கள் நீராடி மகிழ்ந்து பக்திப் பரவசத்திலே ஆழ்நடதுள்ளார்கள் எனக் கூறுவது பொருந்தும்.

இந்த ஆற்று நீரினை எடுத்துத் தலையிலே தெளித்துக் கொள்வதால் நாம் புண்ணியம் அடைந்தவர்கள் ஆகின்றோம். ஈஸ்வரனின் பேரருளைப் பெற்றவர்கள் ஆகின்றோம்.

இங்குள்ள மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும். லிங்கத்தினை வழிபட்டு 108 அர்ச்சனைகளை செய்ய முடியாதவர்கள் இங்கு வந்து இந்த லிங்கங்களை வணங்கினால் அந்தப் பலனை நிச்சயமாக அடைந்தவர்கள் ஆகின்றனர்.

இந்தக் கோவிலின் கிழக்குப் பகுதியிலே கொடிமரமும் பலிபீட லிங்கமும் உள்ளன. இங்கு விளக்குத் தூண் ஒன்று இருக்கின்றது. இது கொடி மரத்தினையும் விட மிகவும் உயரமாகக் காணப்படுகின்றது.

இங்கு ஒரு மேடை உள்ளது. எட்டுத் திசை யானைகள், பைரவர்கள், திக்குப் பாலகர்கள் ஆகியோரை இந்த மேடையிலே காணலாம். இந்த எட்டுத் திசைகளிலும் நந்தித் தேவர் இருப்பார். இவரை வணங்கிய பின்னரே நாம் காளத்தியப்பரை வணங்க வேண்டும்.

நந்தி பெருமானை திசைக் காவலர்களே சுமக்கின்றார்கள். எனவே இவரோடு நாம் இவர்களையும் சேர்த்து வணங்குதல் வேண்டும். இந்தத் திருத்தலமானது யோகத்திற்குரிய சிறப்புத் தலமாக பேசப்படுகின்றது. இங்கு ஆங்காங்கே பல மாடங்கள் இருக்கின்றன. இவ்விடங்களில் பெரிய யானைலிங்கங்களை காணலாம்.

கருவறையில் உள்ள சிவலிங்கமே காளத்திப்பர் எனப்படுகின்றர். இந்தக் கருவறையின் வாயிலிலே நாம் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம். இந்தக் கோவிலுக்கு காளிதேவியின் அருள் அதிகமாகவே உள்ளது. இவை பழைமை, சிறப்பு, தலைமை, சித்தி முதலிய பெருமையை பெற்று விளக்குகின்றன.

இங்கு மேலும் மணிகண்டேசர் கோவில் தனியாக உள்ளது. இங்கு இறந்தவர்களை எழுப்பி அவர்கள் காதுகளிலே மந்திரம் ஓதி அனுப்புகின்றார் இவர். இங்குள்ள பொன் முகலியாறு மணிக் கங்கை யெனவும், மணிகர்ணிகை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோவிலின் உட்கோவிலான காசி விஸ்வநாதர் சந்நிதி பூட்டியே உள்ளது.

கண்ணப்பர் ஈஸ்வரருக்குக் கண்களைத் தந்த இடம் இந்த மலையின் உச்சியிலே உள்ளது. கண்ணப்பர் ஆலயத்தினை யடுத்து நாம் சித்தீஸ்வரம் காணுகின்றோம்.இதனையடுத்து ஒற்றை மண்டபக் கோவில் காணப்படுகின்றது.

இங்குள்ள யோக மூர்த்தம் அய்யப்பனின் உருவத்தினை போன்று விளங்குகின்றது. மேலும் தட்சிணாமூர்த்தி செங்கல்வராயர் சந்நிதிகள் உள்ளன.

இங்கு செப்பு நந்தி, சலவைக் கல் நந்தி ஆகியன உள்ளன.இங்குள்ள நந்திகள் முகம் பன்றியைப் போல காணப்படுகின்றது. இது பல்லவர்களின் சின்னமாகிய பன்றியை உணர்த்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. இங்கு பஞ்சமுகமான லிங்கம் உள்ளது.

இங்கு நமது மனத்தினை கவர்வது காளத்தியார் மூர்த்தம் ஆகும். இங்குள்ள பாணம் மிகவும் முக்கியமானது ஆகும். இது உலோகத்தினால் ஆன கலசத்தினைக் கொண்டு விளங்குகின்றது.

இங்கு கணபதி, பெருமாள், சப்தமுனிவர், சனிபகவான் போன்றோர் ஸ்தாபித்த பல லிங்கங்கள் உள்ளன. கனகதுர்க்க, கார்த்தியாயினி, உடுப்பி பாலசுப்பிரமணியம் ஆலயங்களும் உள்ளன.

இக்கோவில் ஆதிசங்கரர் விஜயம் செய்த தலமாகும். இங்கு காணப்படுகின்ற சண்டிகேசுவரர் சந்நிதி மிகவும் வெளிச்சமாகக் காணப்படுகின்றது.

தேவாரம், திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், திருவருட்பா, திருப்புகழ், ஞானப்பூங்கோதையார் துதி போன்ற பாடல்கள் பெற்றது இத்திருத்தலம்.

Tags:    

Similar News