- பரத்வாஜ் முனிவரால் வழிபட்ட லிங்கம் `லோபாவி' என்னும் இடத்தில் உள்ளது.
- ரோமச முனிவரது சமாதி திருக்காளத்தி கோவிலின் வெண்கல வாசற்படியில் உள்ளது.
பரத்வாஜர் ஒரு தடவை தன் சீடர்களுடன் சொர்ணமுகியில் நீராடி, ஆனந்தத்தை நல்கும் வாயுலிங்கத்தை பக்தியோடு தொழுதார். அவர் தியான நிலையில் ஆழ்ந்திருந்த போது, எத்தகைய இனிமையானது என்று விவரிக்க முடியாத ஒரு தெய்வீக வசனம் அவர் காதுகளில் ஒலித்தது.
`ஓ பரத்வாஜரே! இவ்விடத்தில் சமீபத்தில் தெற்குப்புறமாக ஜீவன்முக்தி அளிக்கவல்ல சாச்வத தலத்தினை அடைந்து வேதங்களின் பாகமாக இருக்கும் `ஸ்ரீருத்ரத்தை' உச்சரித்து என்னை வழிபடுவாயாக. எமது பக்தர்களின் வழிபாட்டிற்காக அவ்விடத்தில் ஒரு லிங்கமும், தீர்த்தமும் இருக்கின்றது என்று காதுகளில் கேட்டது.
இதை கேட்ட பரத்வாஜர் மெய்சிலிர்த்து தம் சீடர்களுடன், இறைவன் சுட்டிக்காட்டியு-ள்ள தலத்திற்கு விரைந்தார். அங்குள்ள தூய்மையான தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள லங்கத்தை வணங்கி ஆராதித்தார். அப்போது உடனே பரமேஸ்வரன் அவருக்கு காட்சி அளித்தார்.
பக்தி பரவசத்தால் நெகிழ்ந்து போன பரத்வாஜ், ஈசனே உம்மை வணங்குகிறேன். ஓ! பரமேஸ்வரரோ! உம்மை பிரார்த்திக்கிறன். இந்த அண்ட சராசரத்திற்கும் காரணமான முதலோனே! வேதங்களினால் புகழப்படுவோனே! அனைத்து செயல்களிலும் உறைந்து முழுமுதலாகி நிற்போனே! உமது கருணையினால் நான் ஞானம் பெற்றவனானேன். எனது வணக்கங்களை ஏற்றுக் கொண்டு எமக்கு அருள் செய்வீராக! என கண்ணீர் மல்க கூறி நின்றார்.
அவரது பக்தியால் மனம் இரங்கிய ஈஸ்வரனும், லிங்கோத்பவரை குறித்து எடுத்துக்கூறி அவரை ஞானம் பெறச் செய்தார். முனிவரால் வழிபட்ட லிங்கமும், உபயோகிக்கப்பட்ட தீர்த்தமும் இனி அவரது நாமம் கொண்டே விளங்கட்டும் என திருக்காளத்தீஸ்வரர் அறிவித்தார். மேலும் அவ்விடத்தில் இறைவனை வழிபடுபவர்கள் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மோட்சமென்னும் சாம்ராஜ்யத்தை அடையப் பெறுவர் என்றும் கூறி மறைந்தார்.
மகாதேவன் அருளால் பரத்வாஜ முனியின் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகி அவர் தன் நிலை உணர்ந்தவராய் மனஅமைதி அடைந்தார்.
ரோமச முனிவரும், சொர்ணமுகி நதியில் நீராடி திருக்காளத்தீஸ்வரரையும், திருஞானப்பிரசுனாம்பிகையையும் தரிசனம் செய்தார். பின்னர், தெற்குப்புற வாயிலில் தட்சிணாமூர்த்தி சிலைக்கு எதிராக முதலில் தர்பை புல்லினை பரப்பி அதன் மீது மான் தோலினை விரித்து, அதன் மீது பத்மாசன நிலையில் அமர்ந்து, தன் உடல், தலை, கழுத்து ஆகியவற்றை ஒருநிலைப்படுத்தி, கண்கள் மூக்கின் நுனியையே கூர்ந்து நோக்க, அவர்தம் மனதை அடக்கி, இறைவனை குறித்து தியானம் செய்தார்.
அவர் மனம் மிக உன்னதமான அமைதி நிலை அடையப்பெற்றது. `நிர்விகல்ப சமாதியினை' அடைந்தார். இறைவனது சிருஷ்களில் அனைத்து உயிருள்ள ஜீவன்களிளும், ஜடப் பொருள்களிலும் இறைவன் உறைந்திருப்பதை உணர்ந்தார் முனிவர். அனைத்து இடங்களிலும், ஏன் நம்மிலும் கூட சிவனையே கண்டார்.
இறுதியாக தான் என்பது வேறு யாருமல்ல. மிக உன்னதமான ஆத்மாவேயாகும் என்பதனை உணர்ந்து கொண்ட அவரது அசைவற்ற நிலையிலுள்ள உதடுகள் `சிவவோஹம்' என உச்சரித்தது. அது அக்கோவில் முழுவதும் சிவோஹத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டதுபோல் தோன்றியது. முனிவரிடம் இருந்து ஒரு ஜோதி எழும்பி திருக்காளத்தீஸ்வரருடன் ஐக்கியமானது.
இக்கதைகளை யார் பக்தியுடன் இறைவன் முன் அமர்ந்து அல்லது பில்வ மரத்தின் அருகில் அமர்ந்து கொண்டு படிக்கின்றனரோ அவர்கள் ஆரோக்கியமும், செல்வ பலமும் பெற்று அறிவாளிகளாக திகழ்வார்கள். இவ்வுலக வாழ்க்கையினை துறக்கும் போது மோட்சத்தை அடைவார்கள் என்பது உறுதி.
பரத்வாஜ் முனிவரால் வழிபட்ட லிங்கமும், தீர்த்தமும் `லோபாவி' என்னும் இடத்தில் இப்போதும் காணப்படுகின்றது. ரோமச முனிவரது சமாதி திருக்காளத்தி கோவிலின் வெண்கல வாசற்படியில் உள்ளது.
காளஹஸ்தி தலத்துக்கு செல்பவர்கள் இந்த லிங்கத்திடமும், ஜீவசமாதி பகுதியிலும் மனம் உருக பிரார்த்திக்க வேண்டும். அது அளவற்ற பலன்களை வாரி வழங்கி, உங்கள் வாழ்வை மேம்படுத்தும்.