முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அமைப்பு
- சுயம்பு வடிவான அன்னை முண்டகக் கண்ணி அம்மன்.
- கருவறை மேற்கூரை தென்னங்கீற்றால் வேயப்பட்டது.
இத்திருகோவில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பொலிவுடன் விளங்குகிறது.
ராஜகோபுரம் வாயிலில் நின்றாலே கருவறையில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு வடிவான அன்னை முண்டகக் கண்ணியைத் தரிசிக்கலாம்.
ராஜகோபுர வாயிலையொட்டி இருபுறமும் நுழைவாயில்களும், வாயில்களுக்கு மேலே மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி சுதை வடிவங்கள் கொண்ட விமானங்கள் உள்ளன.
கருவறையை அடுத்து முதல் சுற்றுப் பிரகாரம் அமைந்துள்ளது. பக்தர்கள் வலம் வரவும், அங்கப்பிரதட்ணம் செய்யவும் வசதியாக பிரகாரம் முழுவதும் கருங்கல் தள வரிசையால் அமைக்கப்பெற்றுள்ளது.
கருவறையின் முன்புறம் மகா மண்டபமும், பின்புறம் பொங்கல் மண்டபமும் அமைத்து திருக்கோவில் பிரகாரம் முழுவதும் மண்டபத்தால் மூடப்பெற்றுள்ளது.
திருக்கோவிலின் தென்மேற்கு மூலையில் திருக்கோவில் அலுவலகமும் வடக்கு பக்கத்தில் மடப்பள்ளி, வாகன மண்டபம் முதலானவை உள்ளன.
அன்னையின் சன்னதி:
கிழக்கு நோக்கிய கருவறையில் அன்னை சுயம்பு வடிவாய் எழுந்தருளி இருக்கிறாள். சூல வடிவாய் பொலியும் சிலா ரூபம், சிலா ரூபத்துள் திரிசூலம் அன்னைக்குப் பின்புறமும் திரிசூல வடிவம் அன்னைக்கு நேர்மேலே கர்ப்பக்கிரக விமானம் அமைந்துள்ளது.
ஐந்து கலசங்கள் கொண்ட விமானத்தின் மத்தியில் மலர்ந்த தாமரையாய் அன்னையின் முகம் புன்சிரிப்புடன் பக்தர்களுக்குக் கருணை மழை பொழிய சுதை வடிவில் காட்சியளிக்கிறாள். ஐந்து தலை நாகம் அன்னையைக் குடைபிடிப்பது போல் உள்ளது. விமானத்தின் இருபுறமும் தேவகன்னியர் வெஞ்சாமரம் வீச நிற்கின்றனர். பூமாலை ஏந்தியும் நிற்கின்றனர்.
அம்பிகையின் கருவறை விமானம் முழுவதும் வெள்ளிக்கவசத்தால் போர்த்தப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது. வாயிலின் இருபுறமும் துவாரபாலகியர் சுதை வடிவில் நிற்கின்றனர்.
இங்குள்ள கருவறை மேற்கூரை தென்னங்கீற்றால் வேயப்பட்டது. அம்பிகை-மாரி என்றாலே குளிர்ச்சியானவள். அன்னை சீதளதேவி எப்போதும் குளிர்ச்சியான இடத்திலேயே இருக்க விரும்புவதால், அன்னையின் மூலஸ்தானம் வெகுகாலமாகவே தென்னங்கீற்றுக் கூரையோடு, வெட்டிவேர் தட்டிகளால் உள்ளே சூழப்பெற்று பராமரிக்கப்பட்டு வருகிறது.
நாக சன்னதி:
கோவிலின் மேற்குப் புறத்தில் கருவறையின் பின்புறத்தில் நாகசன்னதியும், புற்றோடு கூடிய தல விருட்சமான ஆலமரமும் உள்ளன.
மாரியம்மன் கோவில்களில் நாக வழிபாடு உண்டு. இத்திருக்கோவிலின் தலவிருட்சமான ஆலமரத்தடியில் உள்ள புற்றில் இருக்கும் நாகம், தினம் இறைவியைப் பூஜிப்பதாக மரபு, இரவு பூஜை முடிந்து, திருக்கோவில் சாத்திய பின்னர், புற்றில் இருக்கும் நாகப்பாம்பு கருவறைக்கும் வந்து அன்னையை பூஜிப்பது வழக்கம். பலர் கோவிலில் இரவு நேரத்தில் நாகத்தைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.
கருவறையின் பின்னே நாக சன்னிதி தனியே உள்ளது. நாகதோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல் போன்றவற்றிற்கு இங்குள்ள புற்றில் பால், முட்டை வைத்து நாக சன்னிதியில் வழிபாடு செய்வோர் குறைகள் நீங்க பெற்றுள்ளனர். அவ்வாறு நலன் அடைந்தோர் இக்கோவிலின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள அரச மரத்தடியில் நிறைய நாக பிரதிஷ்டைகள் செய்துள்ளனர்.
உற்சவர்தேவி சன்னிதி:
கருவறையில் இடப்புறத்தில் அழகிய விமானத்துடன் கூடிய உற்சவ சன்னிதி உள்ளது. அன்னையின் சன்னிதி சதுர வடிவில் அமைந்துள்ளது. சன்னிதியின் வாயிலின் இருபுறமும் துவார பாலகிகள் வடிவமும், பின்புறம் மாரியம்மன் வடிவமும் சித்திரத்தால் வரையப் பெற்றுள்ளன.
அன்னை முண்டகக் கண்ணி கனிவான பார்வையுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். நான்கு கைகளுடனும் மூன்று கண்களுடனும் சாந்தம் தவழ விளங்கும் அன்னை தலையில் கரந்த மகுடமும், ஏனைய அணிகலன்களும் அணிந்து பின்னிரு கைகளில் உடுக்கையும், சூலமும், முன்னிரு கைகளில் கத்தியும், அபய முத்திரையிலும் காட்சியளிக்கின்றாள்.
விழா காலங்களில் வெள்ளி சிம்மவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் கருணை மழை பொழிகிறாள்.
சப்த மாதர்கள் - ஏழு கன்னியர்:
ஒரே சக்தி, பல வடிவங்களாகத் தன்னைத் தானே பிரித்துக் கொண்டும், மாற்றிக் கொண்டும் மாயை புரியும் தன்மை உடையது. இவ்விதம் எழுந்ததே `சப்த மாதர்கள்' எனப்படும் ஏழு கன்னியர் வழிபாடு.
வாரத்தின் நாட்களை ஏழாகவும், இசையின் அடிப்படை ஸ்வரங்களை ஏழாகவும் வகுத்த நம் முன்னோர்கள் ஒன்றேயான சக்தியையும் ஏழு வடிவங்களாகக் கண்டு வணங்கியிருக்கிறார்கள்.
பழமையான சிவாலயங்களிலும், சக்தி தலங்களிலும் ஏழு கன்னியர்களும் அவர்களுக்கு இருபுறமும் வீரபத்திரரும் விநாயகரும் காணப்படுகின்றனர்.
கிராமங்களில் `கன்னிமார்' வழிபாடு செய்வதை இன்றும் காணலாம். எளிமையாக ஏழு செங்கற்களை வைத்து `ஏழு கன்னி'யரை வழிபடுவதையும் காணலாம்.
ஏழு கன்னியர் பிரம்மி, மகேசுவரி, வைணவி, வராகி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர்.
சிவபெருமான், அந்தகாசூரனுடன் நடத்திய போரிலே சிவபெருமானுக்கு உதவும் பொருட்டு நான்முகன், மகேசுவரன், திருமால் வராகமூர்த்தி, முருகன், இந்திரன் யமன் ஆகிய ஏழு தெய்வங்கள் அனுப்பிய தங்கள் சக்தியின் வடிவங்களே ஏழு கன்னியர்.
கோவிலின் வடபாகத்தில் ஏழு கன்னியர் சன்னதி அமைந்துள்ளது. ஏழு கன்னியர் ரூபமற்ற சிலை வடிவில் உள்ளனர். அவர்களுக்கு இருபுறமும் ஐயனார் சிலையும், முனீஸ்வரர் சிலையும் உள்ளன. சிலர் இதனை பரசுராமர், ஜமதக்னி முனிவர் என்றும் கூறுகின்றனர்.
கருவறையின் முகப்பிற்கு மேலாக சுதை வடிவில் சப்த மாதர்கள் எழில் வடிவொடு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர். இடக்கால் மடித்தும், வலக்கால் தொங்கிய நிலையில் வாகனங்களில் அமர்ந்துள்ளனர். நான்கு கைகள், முன்னிரு கைகள் அபயவரத முத்திரைகளில் காணப்படும் பின்னிரு கைகளிலே படைக்கலங்கள் இருக்கும்.
மகேசுவரி சினத்தையும், வைணவி பேராசையும், பிரம்மி ஆணவத்தையும், கவுமாரி மாயையும், இந்திராணி குற்றம் கண்டு பிடித்தலையும், சாமுண்டி கோள் சொல்லுவதையும், வராகி பொறாமையையும் குறிப்பனவாம். ஏழு கன்னியரை வழிபடுவோர் மேற்குறித்த கெட்ட குணங்கள் கெட, அறியாமை அகன்று நன்னிலை எய்துவர்.