- ஆல மரப்பொந்தில் புற்று உள்ளது. அம்மன் நாக வடிவில் இருக்கிறாள்.
- நாகம் இரவில் புற்றில் இருந்து வெளியில் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறது.
மயிலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் நாகர் சிலைகள் உள்ள பகுதியிலும், நாகதேவதை புற்றாக உள்ள பகுதியிலும் முட்டையை உடைத்து ஊற்றி பெண்கள் வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது. தோஷங்களை நீங்கச் செய்யும் இந்த வழிபாட்டை நாளுக்கு நாள் அதிக அளவில் பெண்கள் செய்து வருகிறார்கள்.
முன்பெல்லாம் தினமும் சுமார் 20 முட்டைகளே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சராசரியாக தினமும் 2 ஆயிரம் முட்டைகள் உடைத்து ஊற்றப்படுகிறதாம்.
அதுவும் ஆடி மாதம் சிறப்பு நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதுபோல நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாக்கெட், பாக்கெட்டாக பால் கொண்டு வந்து ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
இந்த முட்டை+ பாலை உடனுக்குடன் கோவில் பணியாளர்கள் அகற்றி தொடர்ந்து மற்ற பெண்கள் வழிபாடு செய்ய உதவுகிறார்கள்.
நாகம் வழிபடுதல்
மூலவர் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் பின்புறம் ஆல மரம் உள்ளது. அந்த ஆல மரப்பொந்தில் புற்று உள்ளது. இங்கு அம்மன் நாக வடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நாகம் இரவில் புற்றில் இருந்து வெளியில் வந்து அம்மனை வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கு வசதியாக கோவில் நிர்வாகத் தினரே கருவறை ஓலைக்குடிசையின் அடிப்பகுதியில் ஆங்காங்கே ஓட்டை போட்டு வைத்துள்ளனர்.
அதன் வழியாக நாகம் சென்று வருவதாக நம்பப்படுகிறது. இந்த நாகம் சிலரது கண்களுக்கு தென்படுவது உண்டு. ஆனால் அடுத்த ஒரிரு வினாடிகளில் அந்த நாகம் எங்கும் சென்றது என்பதை கண்டு பிடிக்க முடியாதபடி மறைந்து விடுமாம்.
கோவில் ஊழியர்களே அந்த நாகத்தை பல தடவை பார்த்துள்ளனர். ஆனால் அந்த நாகம் பக்தர்கள் யாரையும் இதுவரை அச்சுறுத்தியதாக எந்த வரலாறும் இல்லை.
ராகு-கேதுவின் அமைப்பால் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள், இந்த நாகம் குடியிருக்கும் புற்றுப்பகுதியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் தோஷ நிவர்த்தியாகக் கருதப்படுகிறது. முட்டை உடைத்து, பால் அபிஷேகம் செய்து வழிப்பட்டால் நாக தோஷ பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
சிம்ம வாகனத்தில் உற்சவர்
ஆலயத்தின் வலதுபுறம் அதாவது மூலவர் கருவறைஅம்மனுக்கு இடதுபுறம் அன்னையின் உற்சவர் சன்னதி உள்ளது. தனி கோவில் போல அந்த சன்னதி காட்சி அளிக்கிறது. அங்கு உற்சவர் அம்மன் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.
வீதி உலா செல்வது இந்த உற்சவர் அம்மன் தான். ஒரு வருடத்தில் ஆடி கடைசி ஞாயிறு, விஜயதசமி,தை கடைசி வெள்ளி, சித்ராபவுர்ணமி, வருடபிறப்பு ஆகிய 5 தடவை மட்டுமே உற்சவர் வீதி உலா நடைபெறும். மற்ற நாட்களில் இந்த சன்னதி முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.
கண் நோய்கள் நீங்கும்
அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு பல்வேறு கோரிக்கைகளை சுமந்து கொண்டு பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அதை ஆய்வு செய்த போது பக்தர்களில் பெரும்பாலனவர்கள் தங்கள் கண் நோயை தீர்த்து வைக்குமாறு அன்னையிடம் வேண்டுவது தெரியவந்துள்ளது.
அம்மனின் நாமத்தில் முண்டகக்கண்ணி என்று இருப்பதால் அதை முண்டக்கண்ணி என்ற நோக்கில் பக்தர்கள் நினைத்து கண் நோய்களுக்கான வழிபாடு அதிகம் நடைபெறுகிறதாம்.
இந்த ஆலயத்துக்கு அம்மனுக்கு நன்கொடையாக வரும் வெள்ளி கண் மலர்கள் மற்றும் உண்டியல்களில் அதிகபட்சமாக கிடைக்கும் கண்மலர்கள் மூலம் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாம்.