ஆன்மிக களஞ்சியம்

புரட்டாசி சனி விரதம்

Published On 2023-06-23 11:59 GMT   |   Update On 2023-06-23 11:59 GMT
  • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன.
  • ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.

"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்;

8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர்.

இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம்.

இவையாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. சனீஸ்வரனைப்போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என ஜோதிடம் கூறுகின்றது.இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டலமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி வழிபட வேண்டும். பின் வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருத வேண்டும்.

அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாசி மாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார்.

சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

Tags:    

Similar News