புத்ர பாக்கியம் அருளும் ஸ்ரீநவநீதகிருஷ்ணன்
- ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி கிடைக்கும்.
- உறியடி திருவிழா 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது.
சைவ தலங்களுக்கு புகழ் பெற்ற மதுரையில் வைணவத்தலங்களும் குறைவின்றி உள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாகதான் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது கிருஷ்ணஜெயந்தி. இந்த விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடும் ஆலயங்களில் ஒன்று, ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், பெயரில் பெருமாள் என இருந்தாலும் மதுரை பகுதி மக்களின் உச்சரிப்பில் தெற்கு கிருஷ்ணன் கோவில் என்றே கூறப்படுகிறது.
இதற்கு காரணம் இந்த கோவிலின் ஆதிமூர்த்தி ஸ்ரீநவநீதகிருஷ்ணன் என்பதால் தான். சவுராஷ்டிர சபைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் அமைந்துள்ள வீதியின் பெயரும் கிருஷ்ணன் தெற்கு தெருதான்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தூவாரகை கிருஷ்ணனை மனதில் கொண்டு இங்கு நவநீதகிருஷ்ணன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து சவுராஷ்டிரா சமூக மக்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். அப்போது முதலே இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளடைவில் கோவிலை வழிபட்டோர் கனவில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரர் பெருமாள் பிரசன்னமாகி தன்னையே பிரதிஷ்டை செய்ய சொன்னதால் ஆலயம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயமாக உருமாறியதாக வரலாறு கூறுகிறது.
கோவிலின் திருநாமம் மாறினாலும், ஆதிமூர்த்தியாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபடுவதை பக்தர்கள் கைவிடவில்லை. இதனால் இங்கு கொண்டாடப்படும் உறியடித் திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு வாய்ந்த விழாவாக அமைந்துள்ளது.
உறியடி திருவிழாவுடன் நடைபெறும் கிருஷ்ணஜெயந்தி விழா இக்கோவிலின் ஆன்மீக பக்தர்களால் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது நவநீதகிருஷ்ணன் உற்சவம் தங்கத் தொட்டிலிலும், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், தங்கப் பல்லக்கிலும் வீதி உலா செல்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி, புத்ர பாக்கியம் கிடைப்பது உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இன்றளவும் சுவாமிக்கு பூஜை, நெய்வேத்தியம்., வெண்ணெய் சாத்தி அர்ச்சனை வழிபாடு போன்றவற்றை பக்தர்கள் செய்து வருகின்றனர்.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு 13 அடியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர். மதுரையில் வேறு எங்கும் இதுபோன்று சுதையில் (கற்சிலை) ஆஞ்சநேயர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மதுரையில் புகழ்பெற்ற கூடழலகர் பெருமாள் கோவில், மதன கோபாலசுவாமி கோவில், வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் போன்றவற்றிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.