ஆன்மிக களஞ்சியம்

முருகனின் ஆறு படைவீடுகள்

Published On 2023-07-25 04:44 GMT   |   Update On 2023-07-25 04:44 GMT
  • மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.
  • வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது.

திருப்பரங்குன்றம் முதல் படைவீடு

தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் குன்றிருக்கும் இடமெல்லாம் வீற்றிருந்தாலும், அவரது படைவீடுகளாக 6 தலங்கள் சிறப்பித்து கூறப்படுகின்றன.

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்கு பக்கம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள்.

இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திரு உருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தர... அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப் பெருமானின் திருமணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.

கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்திய கிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இது, இந்திரனுடைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என்பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது என்றும் கூறுகிறார்கள்.

கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்து காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

கோவில் சிறப்புகள்:

* முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

* இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு முடியாது.

* இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விழாக்கள் விவரம்:

தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.

மேலும், இந்த குன்றத்து முருகப் பெருமான் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.

திருக்கார்த்திகை தீபம் அன்று இங்குள்ள குன்றின் உச்சியில் ஏற்றப்படும் பிரம்மாண்ட தீபத்தை சுற்று வட்டார மக்கள் கண்டு தரிசனம் செய்வது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். மதுரை மாநகர் மக்களும் இந்த கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்யலாம்.

Tags:    

Similar News