திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
- திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது.
- கோவில் 2000 ஆண்டுகள் பழமை கொண்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்து கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என போற்றப்படும் மிக சிறப்புமிக்க கோயிலாகும்.
பழமையான கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அருகில் அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.
முருகப்பெருமானுக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் "திருச்சீரலைவாய்" என முன்னர் அழைக்கப்பட்டது.
தல வரலாறு
தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.
இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார்.
அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.
பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.
கோயில் அமைப்பு:
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.
தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும்.
ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது.
இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார்.
முருகனின் பெருமைகளை சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை இந்து சமய மக்களிடம் உள்ளது.சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது.
இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.
கங்கை பூஜை தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர்.
இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.