ஆன்மிக களஞ்சியம்

அண்ணாமலையின் அன்னதான பெருமை

Published On 2023-11-25 12:07 GMT   |   Update On 2023-11-25 12:07 GMT
  • தானத்தில் சிறந்தது அன்ன தானம். அத்தானத்திற்கு சமமான தானம் மூவுலகிலும் இல்லை.
  • பவுர்ணமி தோறும் எதை நினைத்து அன்னதானம் செய்தாலும், அவை நல்ல பயனைத் தரும்.

தானத்தில் சிறந்தது அன்ன தானம். அத்தானத்திற்கு சமமான தானம் மூவுலகிலும் இல்லை.

அன்னம் கொடுப்பவர் உயிரையே கொடுப்பவர் ஆகிறார்.

தென்னாட்டில் முன்னொரு காலத்தில் சிங்கத்வஜன் என்ற அரசன் இருந்தான்.

அவன் அன்னதானம் தவிர மற்ற தானங்கள் யாவையும் எக்காலமும் செய்து வந்தான்.

அவன் இறந்த பிறகு இந்திரலோகம் சென்றான். அரசனின் குமாரன் சித்திரகேது அரசபட்டம் சூட்டப் பெற்றான்.

நாரதர் அவனிடம், உன் தந்தை எல்லாவித தானங்களும் செய்திருந்த போதிலும் அன்னதானம் செய்யாததினால் அவர் மேலோகம் சென்றபோது அமிர்தம் கிடைக்கவில்லை.

ஆகவே உனக்கும் உன் தந்தைக்கும் அமிர்தம் கிடைக்கும் பொருட்டு நீ அன்னதானம் செய்வாயாக என அறிவுறுத்தினார்.

அரசனும் அதைக் கேட்டு அன்னதானம் செய்யத் தீர்மானித்தான்.

அரசன் நாரதரை நோக்கி, "இப்பூவுலகில் எவ்விடத்தில் எந்த நாளில் அன்னதானம் செய்தால் பிற இடங்களில் செய்வதை விட அதிகப்பலன் அடையலாம்" என்று கேட்டான்.

அதற்கு நாரதர் மற்ற இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு அன்னமளிப்பது காசியில் ஒருவருக்கு அன்னமளிப்பதற்கு ஈடாகும்.

காசியில் கோடி பேருக்கு அன்னமளிப்பது திருவண்ணாமலையில் ஒருவருக்கு அன்னமளிப்பதற்கு சமமாகும்.

அப்பேற்றை பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் அளவிட முடியாது.

திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் வேறெங்கும் கிடையாது என்று கூறினார்.

சித்ரகேது அண்ணாமலையாரை ஆராதித்து தினமும் அன்ன தானம் செய்து வழிபட்டான்.

இவன் அன்னதானம் ஆரம்பித்த உடனே இந்திரன் கொடுத்த அமிர்தத்தை அவன் தந்தை அருந்தி சிவலோகம் அடைந்தார்.

எனவே நீங்கள் ஒவ்வொரு பவுர்ணமி தோறும் எதை நினைத்து அன்னதானம் செய்தாலும், அவை நல்ல பயனைத் தரும்.

கல்வி, திருமணம், புத்திரம், வேலை, பதவி உயர்வு, அரசியல், வெற்றி, பிறந்தநாள், திருமண நாள், முன்னோர்கள் திதி, ஆரோக்கியம் போன்ற எல்லா வகையான பயனை பெற தாங்களால் இயன்ற சிறுதொகையை அன்னதானத்திற்கு அளிக்கலாம்.

Tags:    

Similar News