ஆன்மிக களஞ்சியம்

அரியநாயகிபுரம் கைலாசநாதர் ஆலயம்

Published On 2023-12-27 12:26 GMT   |   Update On 2023-12-27 12:26 GMT
  • நாயக்கர் மன்னர்களின் காலத்தில் மந்திரியாக விளங்கியவர் அரியநாதர்.
  • மூன்று தலைமுறையாக இவரே தளபதி மற்றும் மந்திரியாகவும் இருந்தார்.

நாயக்கர் மன்னர்களின் காலத்தில் மந்திரியாக விளங்கியவர் அரியநாதர்.

அவர் அந்தணர்கள் தங்கி பூஜை செய்யும் ஒரு அற்புத கிராமத்தை தாமிரபரணி கரையில் உருவாக்கியுள்ளார்.

அந்த ஊரின் பெயர் அரியநாயகிபுரம்.

இந்த கிராமம் மற்றும் சிவன் கோவில் தோன்றிய வரலாற்றை பார்ப்போம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி நதிக்கரையில் 15 சிறுவர்கள் மணல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அந்தணர் ஒரு பையனைப் பார்த்து, "தம்பி..தம்பி... தம்பி" என்று தனியாக கூப்பிட்டார்.

"என்ன சாமி" என்று அந்த பையனும் வந்தான்.

அவனிடம், "தம்பி நீ வருங்காலத்தில் பெரிய பொறுப்பு உள்ளவனாக வரப்போகிறாய்" என்றார்.

அந்த பையன் சிரித்தபடியே, "அட போங்க சாமி... உங்களுக்கு வேறு வேலை கிடையாது" என்று கூறி விட்டு கிளம்பினான்.

ஆனால் பிராமணர் விடவில்லை.

"தம்பி... நாம இரண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.

நீ பெரிய ஆளாய் இருக்கும்போது இந்த ஒப்பந்தத்தை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்கள் கேட்கும் உதவியை நீ செய்து கொடுக்க வேண்டும்" என்றார்.

விளையாட்டு பையனாக இருந்த அந்த பையனும் பிராமணரிடம் ஓலைச்சுவடி ஒன்றில் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தான்.

அதில், "பல ஆண்டுகள் கழித்து சிறு பையனான நான் பெரிய மந்திரியானால் இவருடைய வாரிசு யார் வந்து

எது கேட்டாலும் அப்படியே கொடுத்து விடுவேன்" என்று எழுதி அந்த ஓலைச் சுவடியை பிராமணர் வசம்

சிறுவன் கொடுத்து அனுப்பினான்.

காலங்கள் உருண்டோடின. இருபது ஆண்டுகள் கழிந்தது.

அந்த பையன் பிற்காலத்தில் அரியநாத முதலியார் ஆனார்.

அவரே விஸ்வநாத நாயக்கரின் அரசவையில் தளபதியாகவும் மந்திரியாகவும் செயல்பட்டார்.

அவரிடம் மட்டுமல்லாமல் அவரது மகன் கிருஷ்ணப்ப நாயக்கர், பேரன் வீரப்ப நாயக்கர் காலத்திலும் மூன்று

தலைமுறையாக இவரே தளபதி மற்றும் மந்திரியாகவும் இருந்தார்.

ஆனால் அரியநாத முதலியார் சிறுவயதில் பிராமணரிடம் போட்ட ஒப்பந்தத்தை முழுவதுமே மறந்திருந்தார்.

ஒருநாள் அழுக்கு வேஷ்டியுடன் ஒரு அந்தணர் அரண்மனை வாயிலில் மந்திரியை தேடி நின்றார்.

வாயிற்காவலர்கள் ஓடிப் போய் மந்திரியிடம் கூறினர்.

உடனே அந்த அந்தணரை அழைத்து வரச் சொன்னார் அரியநாயக முதலியார்.

ஓலைச் சுவடியுடன் உள்ளே வந்த அந்த பிராமணரை முழுவதுமாகவே அரியநாதருக்கு தெரியவில்லை.

பிராமணர் தான் கொண்டு வந்திருந்த ஓலைச்சுவடியை எடுத்துக் கொடுத்தார்.

அதை எடுத்து பார்த்த அரியநாதருக்கு தனது 15வது வயதில் ஆற்றங்கரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

உடனே வந்த பிராமணருக்கு தனி ஆசனம் கொடுத்து மரியாதை செய்தார். "என்ன வேண்டும் கேளுங்கள்" என்றார்.

"மந்திரியே... தாமிபரணி நதிக்கரை யோரம் ஒரு சின்ன கிராமம் வேண்டும். அதில் நல்லதொரு சிவாலயம் வேண்டும்.

அதில் பூஜை செய்ய வேதபோத அந்தணர்களை பணியமர்த்த வேண்டும்.

அவர்கள் அந்த சிவாலயத்தில் நாடு சுவிட்சம் பெற பூஜை செய்ய வேண்டும்" என்றார்.

"சரி, அப்படியே செய்கிறேன்" என்ற அரியநாதர் "கோவில் அமைய வேண்டிய இடத்தை காட்டுங்கள்" என்றார்.

அந்தணரோ, தற்போது அரியநாயகிபுரம் உள்ள இடத்தை காட்டினார்.

உடனே கோவில் கட்டும் பணி தொடங்கியது. அதன்பின் கிராமம் அமைக்கப்பட்டது.

அதில் சிவபெருமானுக்கு கைலாசநாதர் என்று பெயரிடப்பட்டு, அன்னைக்கு அரியநாயகி என்று பெயரிட்டனர்.

பெரும்பாலும் ஒரு கோவிலை கட்டுபவர் அவரது பெயரிலே சிவன் அழைக்கும்படி பெயரிடுவார்கள்.

ஆனால் இவ்வூர் கோவிலில் தாயார் பெயர் அரியநாதர் பெயரில் அரியநாயகி என்று அழைக்கப்படுகிறார்.

இவ்வூரில் 21 வீரபுத்திரர் கோவில் உள்ளது சிறப்பம்சமாகும்.

நடை காலை 6 மணியில் இருந்து 10 மணி வரைக்கும் மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.

இக்கோவிலுக்கு செல்ல வேண்டுமென்றால் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து முக்கூடல் செல்லும் அனைத்து டவுண் பஸ்களிலும் செல்லலாம்.

இல்லையென்றால் சேரன்மகாதேவியில் இருந்து வேன் வசதிகள் உள்ளது.

Tags:    

Similar News