எதையும் தாங்கும் இதயம் தரும் குச்சனூர் சனீஸ்வர பகவான்!
- ஒருவர் செய்யும் பாவ காரியத்திற்கு ஏற்ப கஷ்டம் வரும்.
- அதிலும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது விசேஷம்.
எதையும் தாங்கும் இதயம் தரும் குச்சனூர் சனீஸ்வர பகவான்
வாழ்விலே இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும்.
அதை அமல்படுத்தும் நீதிதேவன் சனீஸ்வரன் முற்பிறவியில் செய்த கர்மத்திற்கு இப்பிறவியில் கோச்சாரம் லக்கினம் பார்த்து பலன் அளிக்கிறார்.
நள மகாராஜா சனி கிரஹ தோஷத்தால் எவ்வளவு கஷ்டப்பட்டானோ தோஷ நிவாரணம் ஆனதும் அவ்வளவு சுபிட்சத்தை பெற்றான்.
ஆகவே ஒருவர் செய்யும் பாவ காரியத்திற்கு ஏற்ப கஷ்டம் வரும். கஷ்டம் நீங்க சனீஸ்வரனை வழிபட்டால் உடனடியாக கஷ்டத்தை நீக்கிவிடமாட்டார்.
அதை தாங்கிக்கொள்ளும் மனோதிடத்தைத் தருவார்.
குறிப்பிட்ட காலம் வந்ததும் சுபிட்சம் தருவார். இதுதான் வாழ்வியலின் தத்துவம்.
அந்த வகையில் சனிப்பெயர்ச்சியிலும் சாதகமும், அவரவர் ராசிப்படி அமையும். பாதிப்பு வரும் ராசிக்காரர்கள் சனீஸ்வரனை வழிபட்டு வருமுன் காக்கும் தெளிவினைப் பெற வேண்டும்.
திருநள்ளாறு சனீஸ்வரன் தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்தில் உபசன்னதியில் இருக்கிறார்.
ஆனால் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சனிபகவான் தனிக் கோவில் கொண்டுள்ளார்.
அதிலும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது விசேஷம்.
குச்சனூர் சனீஸ்வரன் திருக்கோவில் நான்கு புறமும் பசுமைபாடும் இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது.
திருக்கோவிலின் முன்பு சுரபி நதி என்னும் ஜீவநதி பாய்ந்தோடுகிறது.
அந்த நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றி, காக வாகனத்தை தலையைச் சுற்றி, காக மண்டபத்தில் வைத்து அர்ச்சனை செய்து சனீஸ்வரனை வழிபடுவர்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருள் அடக்கம் என்பதால் 3 ஜோடி கண்களும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என்ற தாத்பரியத்தில் நான்கு கரங்களும், இரண்டு பாதமும் அமைக்கப்பட்டுள்ளன.
நவகோள்கள் இயக்கத்தில்தான் மானிட இனம்,விலங்கினம், பறப்பன போன்ற இனங்களும் வாழ்கின்றன.
சூரியன் இயங்கவில்லை என்றால் வையகத்தில் மழை இல்லை, வெளிச்சம் இல்லை.
அதே போல சனி கோள் நீதி தேவனாக செயல்படுகிறது.
முற்பிறவியில் செய்த கர்மாவிற்கு, இப்பிறவியில் கோச்சாரம் பார்த்து பலனை கொடுக் கிறார்.
அதே போல் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு வம்சாவளியினரை பாதிக்கும் வகையில் கஷ்டத்தை கொடுக்கிறார்.
குச்சனூர் சுயம்பு சனீஸ்வரனை வழிபட்டால் எதையும் தாங்கும் மனோதிடம் தருவார். குறிப்பிட்ட காலம் ஆனதும் சுபிட்சத்தை வாரி வழங்குவார்.