ஆன்மிக களஞ்சியம்

கோபுரத்தின் பிரமிப்பூட்டும் அழகு

Published On 2024-02-05 11:10 GMT   |   Update On 2024-02-05 11:10 GMT
  • தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பழந்தமிழக கட்டிடக்கலை ஆற்றலின் இமயமாக திகழ்கிறது.
  • உட்சுவர்களும், புறச்சுவர்களும், விளங்க கோபுரம் மேல் எழுந்து கம்பீரமாக நிற்கிறது.

தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பழந்தமிழக கட்டிடக்கலை ஆற்றலின் இமயமாக திகழ்கிறது.

இந்த கோபுரம் 30.18 மீ சதுர அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனை சுற்றி நான்கு புறமும் வாயில்களுடன் அந்தராளம் எனும் அறையுடன் திகழ்கின்றது.

ராஜராஜஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுவம் நடுவே திகழ, ஒரே வாயிலும் 11 அடி கனமுடைய சுற்றுச்சுவர்களுடனும் கருவறை உள்ளது.

கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அந்தாராளம் என்னும் அறை 6 அடி அகலம் உடையதாக விளங்குகின்றது.

இதற்கு புறச் சுவர்களாக திகழும் 4 சுவர்களின் அகலம் 13 அடி கனமுடையதாகும்.

இவ்வாறு உட்சுவர்களும், புறச்சுவர்களும், விளங்க கோபுரம் மேல் எழுந்து கம்பீரமாக நிற்கிறது.

இருபுறச் சுவர்களிலும் இப்போது சோழர் கால ஓவியங்களோடு நாயக்கர் கால ஓவியங்களும் காணப்பெறுகின்றன.

இரண்டாம் நிலை (மாடியில்) உள்ள சுற்றறையில் சிவபெருமானே நாட்டியம் ஆடுவதாக உள்ள கரணச் சிற்பங்கள் உள்ளன.

இச்சுற்றறையின் மேல் நிலையில் இருபக்க சுவர்களும் ஒவ்வொரு அடுக்கிலும், ஒவ்வொரு கல்லாக நீண்டு இறுதியாக உட்புற சுவர்களும் வெளிப்புற சுவர்களும் ஒன்றாக இணைந்து 30 அடி கனமுடைய தளத்தினை உருவாக்கி உள்ளன.

இந்த தளத்தில் இருந்து சதுர வடிவில் பிரமிடு அமைப்பில் குவிந்த வண்ணம் 13 அடுக்குகளில் விமானம் மேல் நோக்கி உயர்ந்து சென்று, கடைசியாக 8.7 மீ. பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்குகின்றது.

இத்தளத்தின் மேல் நான்கு மூலைகளிலும் 1.34 மீ. உயரமும் 1.40 மீ அகலமும் கொண்டு பக்கத்துக்கு இரண்டு இரண்டாக எட்டு நந்திகள் உள்ளன.

மையத்தில் 20 மீ. சுற்றளவுள்ள கிரீவம், அதன் மேல் பிரம்மாண்டமான சிகரம் ஆகியவற்றோடு சுமார் 12 அடி உயரமுடைய கலசத்தையும் பெற்று கம்பீரமாகத் திகழ்கிறது.

இந்த கோபுரம் தரையில் இருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுடையது ஆகும்.

சிகரத்தின் நான்கு திக்குகளிலும் எழில் கொஞ்சும் கீர்த்தி முகங்கள் உள்ளன.

மையத்தில் யாளித்தலையும், அதற்கு கீழ் வாள் கேடயம் ஏந்திய பூதகணங்களின் ஓர் அணியும், அதற்கு கீழே அணிவகுத்து நிற்கும் யானைகளும், அனைத்திற்கும் கீழாக யாளிமுக வரிசையும் கொண்டு இந்த கீர்த்தி முகங்கள் அமைந்துள்ளன.

கிரீவத்தின் நான்கு திசைகளிலும் கீர்த்தி முக அமைப்புக்கு கீழாகப் பத்மாசனத்தில் சிவபெருமான் அமைந்துள்ள சிற்பங்கள் உள்ளன.

தெற்கு, மேற்கு திசைகளில் அபயம் வரதம் காட்டித் திரிசூலமும், மழுவும் ஏந்திய கரங்களோடு திருவுருவங்கள் உள்ளன.

வடக்கு திசையில் உள்ள சிற்பத்தில் மழு, திரிசூலம் ஏந்திய நிலையில் அபயம் காட்டி, மாதுளம் கனி ஏந்தியவாறு அமர்ந்துள்ளார்.

கிழக்கில் உள்ள சிற்பத்தில் மான் மழு ஏந்தியவராக, அபயவரத கரங்களோடு அமர்ந்து அருள்பாலிக்கும் நிலையைக் காண முடிகிறது.

Tags:    

Similar News