ஆன்மிக களஞ்சியம்

கோவர்த்தன கிரிதாரி

Published On 2023-05-30 09:43 GMT   |   Update On 2023-05-30 09:43 GMT
  • மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.
  • கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான்.

கிருஷ்ணருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் கோவர்த்தன கிரி மேய்ச்சல் நிலமாக பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர். ஒரு நாள் ஆயர்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு சென்று கொண்டிருந்தனர்.

எங்கே போகிறீர்கள்? என்று கிருஷ்ணர் கேட்க, பொங்கல் இட, இந்திரனுக்கு வழிபாடு செய்ய செல்கிறோம் என்றனர்.

ஞாயிறு, திங்கள், மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம். இவற்றை விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறது என்றான் கண்ணன்.

மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.

பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம், செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா என்று கேட்டான் கண்ணன்.

அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக்கொண்டனர். எந்தத்தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத்தம் பசுக்களை மதித்து வழிபட்டனர். இந்திரன் இதனை அறிந்து கோபம் கொண்டான். ஆயர்களை அடக்குவதற்காகக் கடுமையாக மழை தொடர்ந்து பெய்ய செய்தான். இடியும் மின்னலும் உடன் சேர்ந்தன. ஆயர்களும் பசுக்களும் தவிப்புக்குள்ளானார்கள்.

கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான். அதன் நிழலில் கன்றுகளும், பசுக்களும், இடையர் சிறுவர்களும், பெரியோர்களும் தஞ்சம் அடைந்தனர்.

கண்ணனின் பேராற்றலைக் கண்டு வியந்த இந்திரன் தரைக்கு வந்து கண்ணனை வணங்கித்தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். கண்ணனை அவன்தன் தம்பியாக ஏற்றுக்கொண்டான். அதனால், கண்ணனுக்கு உப இந்திரன் என்ற பெயர் வழங்கலாயிற்று, பசுக்களைக் காத்தமையின் கோவிந்தன் என்னும் பெயரும் நிலைத்துவிட்டது. துன்பம் வரும்போது அனைவரும் கோவிந்தன் பெயரைச் சொல்லி அழைப்பதும் வழக்கமாகி விட்டது.

Tags:    

Similar News