இறைவனுக்கான பூஜையில் மலர்களின் முக்கியத்துவம்
- தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு,
- ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்!
இறைவனை பூக்கள் கொண்டு பூஜை செய்தவற்கும் இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
வாசனையற்ற மலர்களை கொண்டு இறைவனை பூஜை செய்யவே கூடாது. (சில மலர்கள் விதிவிலக்கு). தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு புத்திரர்கள் இருந்தும் அவர்களால் எந்த வித சந்தோஷமும் இல்லாதவாறு அமைந்துவிடும்.
தொன்மையான ஆலயங்களில் நடைபெறும் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளுக்கு பூஜைக்கு ஏற்ற வாசனைமிக்க மலர்களை உபயமாக தரவேண்டும். தொடர்ந்து இது போன்று செய்துவந்தால் புத்திரர்கள் நல்ல புத்தி பெறுவார்கள்.
சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி, பொங்கல் மற்றும் தீபாவளி திருநாள் ஆகிய விஷேட நாட்களில் திருக்கோவில்களுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தரும் கைங்கரியத்தை அனைவரும் இயன்றவரை செய்துவர வேண்டும்.
நாம் தனிப்பட்ட முறையிலும் நம் தளம் சார்பாகவும், சிவராத்திரி உள்ளிட்ட விஷேட நாட்களில் இந்த கைங்கரியத்தை செய்ய தவறுவதேயில்லை.
சென்ற நவராத்திரி சமயத்தின் போது கூட நம் தளம் சார்பாக குமணன்சாவடி அருகே உள்ள கண்ணபிரான் திருக்கோவிலுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மலருக்கும் ஒரு குணமும் சக்தியும் உண்டு.
உதாரணத்துக்கு ஒரு வில்வ தளம் லட்சம் பொன்மலர்களுக்கு சமம். ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்ப்பட்ட பாவங்களும் விலகும்.
ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்! (மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வம் பறிக்கக்கூடாது).
வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது உபயோகப்படுத்தி விட்டு தண்ணீர் விட்டு அலம்பி மீண்டும் உபயோகப்படுத்தலாம். (இந்த சிறப்பு தங்கத்திற்கு மட்டுமே உண்டு).
ஆனால் ஒரு தெய்வத்திற்கு அர்ச்சித்த பூக்களையோ அல்லது இதர பொருட்களையோ மற்ற தெய்வத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
சீரும் சிறப்புமாக தற்போது வாழ்ந்து வருபவர்களை காண நேர்ந்தால் "சென்ற ஜென்மத்தில் இறைவனுக்கு நல்ல மலர்களை கொண்டு பூஜை செய்திருப்பார்கள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் வீட்டின் முன்பகுதியில் நிச்சயம் தோட்டம் அமைப்பர். அதில் பூஜைக்குரிய மலர்களின் செடிகள் வளர்க்கப்படும்.
அதில் பூக்கும் மலர்களை கொண்டு தான் இறைவனுக்கு பூஜை செய்வார்கள். மிகுதியாக உள்ளவற்றை அருகே உள்ள ஏதாவது ஆலயத்திற்கு தருவார்கள்.
ஆனால் இப்போது வீட்டின் முன்னே இடமிருந்தால் கடையை கட்டி வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். இந்த ஜென்மாவில் கூட நாம் முழுமையாக அனுபவிக்க முடியாத செல்வத்தை சேர்ப்பதில் குறியாய் இருப்பவர்கள், பல ஜென்மங்களில் நமக்கு நற்பேறுகளை அளிக்கவல்ல இந்த மலர்க் கைங்கரியத்தை செய்ய தலைப்படுவது கிடையாது.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள், வீட்டில் தோட்டம் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டும். சௌபாக்கியங்களில் இதுவும் ஒன்று. அத்தனை சுலபத்தில் எல்லோருக்கும் கிட்டாது.