ஆன்மிக களஞ்சியம்

கல்யாண மாலை நிச்சயம்

Published On 2023-09-29 12:05 GMT   |   Update On 2023-09-29 12:05 GMT
  • “இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் உனக்கு பாதை காட்டும் என்றது அசரீரி.
  • இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.

இலங்கையில் இருந்து வணிகர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரையின் போது சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய கப்பலில் வந்து செல்வார்.

ஒருமுறை கடும் புயல், மழை பெய்தது.

இதனால் குலசேகரன்பட்டினம் வரை கப்பலில் வந்தவர் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே தங்கும்படியானது.

சிவனைத் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலையால் அந்த வணிகர் கதறி அழுதார்.

அவரது வாட்டத்தை அறிந்த சிவனார், அங்கேயே அவருக்கு திருவாதிரைக் கோலத்தில் காட்சி தர முடிவு செய்தார்.

அப்போது, "இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் வரிசையாகச் சென்று, உனக்கு பாதை காட்டும்.

அந்த எறும்புக்கூட்டம் நிற்கும் இடத்தில், உனக்குத் திருக்காட்சி தருவேன்" என அசரீரி கேட்டது.

அதன்படியே எறும்புகள் வழிகாட்ட, அவற்றைப் பின்தொடர்ந்த வணிகர், ஓரிடத்தில் தில்லையின் திருவாதிரைத் திருக்காட்சியைக் கண்டு சிலிர்த்தார்.

பிறகு, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பி, சிவனுக்கு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார்.

திருச்செந்தூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குலசேகரன்பட்டினம்.

இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பங்குனி உத்திரப் பெருவிழாவை விமரிசையாகக் கொண்டாடும் தென் மாவட்ட ஆலயங்களுள், முதன்மையான தலம் இது ஆகும்.

பங்குனி உத்திர நாளில், இங்கு திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும்.

பங்குனி உத்திர நாளில், திருமணப் பிரார்த்தனை செய்பவர்கள், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இரண்டு மாலைகளை மாற்றி,

அதில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, தங்களின் கழுத்தில் அணிந்து, ஆலயத்தைப் பிரகார வலம் வருவர்.

இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.

அதேபோல் இங்கு தருகிற மஞ்சளை, பெண்கள் தினமும் குளித்துவிட்டுப் பூசிக் கொள்ள, வீட்டில் விரைவில் கெட்டிமேள சத்தம் கேட்குமாம்.

திருக்கல்யாணம் முடிந்த அன்றைய தினம், இரவு 7.30 மணிக்கு, சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அமர்ந்தபடி காட்சி தருவர்.

இதைத் தரிசிக்க நம் வேதனைகள் பறந்தோடி விடும்.

Tags:    

Similar News