கண்ணன் பிறந்தான்... எங்கள் கண்ணன் பிறந்தான்....
- இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
- பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.
அரக்க குணம் கொண்ட கம்சனை அழிக்கவும், குருச்சேத்திர போர் மூலம் 100 கவுரவர்களையும் அவர்களுக்கு உதவியவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் கண்ணன் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன்.
அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது.
தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும் முடிவுக்கு கம்சன் வந்தான்.
'கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு.
அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்.
தேவகியை விட்டு விடு!' என்று வாசுதேவர் கூறவே, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான் கம்சன்.
உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.
தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான் கம்சன்.
8வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி.
இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப் பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.
ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது.
பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத் தொடங்கியது.
'உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்.
யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்'
என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.
குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன. காவலர்கள் மயக்கமுற்றனர்.
வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார்.
குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.
காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான்.
ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான்.
ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது.
'ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்' என்று கூறி மறைந்தது.
அந்த குழந்தைதான் பின்னாளில் பவானி அம்மனாக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது.
மாயமாய் மறைந்த பெண் குழந்தை சொன்னதைக் கேட்டு கம்சன் மேலும் அதிர்ச்சி அடைந்தான்.
தனது பணியாட்களை அனுப்பி விசாரித்தான். அப்போது கோகுலத்தில் வளரும் கிருஷ்ணர் தான் தேவகி பெற்ற 8 வது குழந்தை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கம்சன் தனது வீரர்களை அனுப்பி கிருஷ்ணனை கொல்ல முயன்றான்.
அந்த அசுரர்கள் அனைவரையும் கிருஷ்ணர் வதம் செய்தார்.
இளவயதில் பிருந்தா வனத்தில் இருந்த பெண்களின் மனதில் கிருஷ்ணர் இடம் பிடித்தார்.
இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.
பிறகு மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிர சேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார்.
தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார்.
பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருசேத்திரப் போரில், தனது சேனையை கவுரவர்களிடம் கொடுத்து விட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார்.
இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.
அவரது அவதார தினம்தான் உலகம் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.