- பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரக தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்
- குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால்
தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம்.
விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம்
ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி
பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி,
சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.
தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு,
சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம்.
இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும்
அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர்.
கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம்
கள் உண்டபாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள்
ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவவிஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து,
வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால்,
குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.