ஆன்மிக களஞ்சியம்

குலசை திருவிழா-கஷ்டங்களை போக்கும் காளி வேடம்

Published On 2023-08-14 05:50 GMT   |   Update On 2023-08-14 05:50 GMT
  • காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது.
  • ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.

கஷ்டங்களைப் போக்கும் காளி வேடம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. தசரா வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.

காளிவேடம் போட்டு இருப்பவர்கள் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். காளி இல்லாத தசரா குழுக்கள் இருக்காது.  சூரசம்ஹாரத்தன்று காளிவேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர் மண்டபத்துக்கு வந்து, அம்மனை சூழ்ந்து நிற்பார்கள்.

அம்மன் மகிசனைக் கொல்லை புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருவார்கள். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துவார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் அணிந்து இருப்பவர்கள், அம்மனை சூழ்ந்து நிற்பார்கள், இது தமிழ் நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள்.

தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து காலை, மாலை இரு நேரமும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். இவ்வாறு விரதம் மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாள்கணக்கில் காளிவேடம் ஏற்று ஊர், ஊராக சென்று வருவார்கள்.

தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டு தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் & இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும்.

இப்பொருட்களின் மொத்த எடை அளவு இருபது முதல் முப்பது கிலோ வரை இருக்கும். கடும் விரதம் மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தை போடுபவர்களை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.

காளிவேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே வந்ததாக பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கை அளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி உள்ளது. இதனால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை நிலவுகிறது.

எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாகி விட்டது. காளி வேடத்தை முதன் முதலில் போட்டவர் யார் என்று பல்வேறு தசரா குழுவினரிடமும் கேட்டு ஆய்வு செய்த போது, குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செட்டியார் என்பவர்தான் முதன் முதலாக முத்தாரம்மன் ஆலயத்தில் விரதம் இருந்து காளி வேடம் போட்டதாக தெரிய வந்தது.

அவரைத் தொடர்ந்து சேது பிள்ளை என்பவர் காளி வேடம் அணிந்ததாக கூறப்படுகிறது. குலசேகரன்பட்டினம், சிறு நாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, உடன்படி சந்தையடியூர், சுண்டங்கோட்டை ஊர்களைச் சேர்ந்த பலர் தொடர்ந்து பல ஆண்டுகள் காளி வேடமிட்டு சாதனை படைத்துள்ளனர்.

உடன்குடி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. உறுப்பினரும் பெரியபுரம் அம்பாள் தசரா குழுவின் செயலாளருமான எஸ்.பிரபாகர் முருகராஜ் 30 ஆண்டுகள் பல்வேறு வேடங்கள் அணிந்து முத்தாரம்மனுக்கு சேவை செய்தவர். இதில் 7 ஆண்டுகள் அவர் காளி வேடம் ஏற்றார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "காளி வேடம் போடுபவர்கள் மிக, மிக பயபக்தியுடன் விரதம் இருக்க வேண்டும். அம்மன் அவர்கள் மூலம் நிறைய வாக்குகள் சொல்வாள். இது முத்தாரம்மனின் மகிமைகளில் ஒன்று" என்றார்.

கொழும்பில் தொழில் புரியும் இவர் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக தசரா குழுவினரை ஒருங்கிணைத்து சேவையாற்றி வருகிறார். அதோடு குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் சேவைகளையும் செய்து வருகிறார்.

குலசை வரும் பக்தர்கள் வசதிக்காக இன்னும் நிறைய திருப்பணிகள் செய்ய வேண்டும் என்கிறார் இவர். தனது வேண்டுகோளை ஏற்று குலசையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் வடக்கு கடற்கரை சாலை அமைத்து தந்ததை பெருமையுடன் கூறினார்.

காளி வேடம் போடுபவர்கள் நேர்ச்சையின் பொருட்டு அவ்வேடத்தைப் போடுவதாகத் தாமே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால் பிற வேடங்களைப் போடுபவர்கள் தம் ஊர்களில் உள்ள கோவில் பூசாரிகளிடமோ சாமி ஆடுபவரிடமோ கணக்குக் கேட்டு, போட வேண்டிய வேடம் குறித்து முடிவு செய்கின்றனர்.

இதுவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபாகும். ஆனால் இம்மரபு கடந்த சில ஆண்டுகளாக மாறி விட்டது. தற்போது பெரும்பாலான பக்தர்கள் தாம் விரும்பிய வேடத்தை யாரிடமும் கேட்காமல் தாமே தேர்வு செய்து போட்டு கொள்கின்றனர்.

எந்த வேடத்தை ஏற்றாலும் விரதம் இருக்க வேண்டியது என்பது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். காளி வேடம் தவிர, பிற வேடங்களைப் போடுபவர்கள் கொடியேற்றத்திற்குப் பின், பத்துநாள், ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் என்ற கணக்கில் அவரவர் வசதிக்கேற்ப விரதம் இருக்கின்றனர்.

இவர்கள் தங்கள் ஊர்களில் தசராக் குழுக்களை அமைத்துக் கொள்வார்கள். கிருஷ்ணன், பரமசிவன், இந்திரன, சூரியன், யமன், சந்திரன், இராமர், ஆஞ்சநேயர், பஞ்சபாண்டவர், அரசன், அரசி, குறவன், குறத்தி, காவலர், மோகினி, அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், கரடி, குரங்கு, புலி, போன்ற ஏராளமான வேடங்களைத் தசரா நாட்களில் காணமுடியும்.

சிலர் ஆண்டுதோறும் ஒரே வேடத்தைத் தொடர்ந்து போடுவார்கள். வேறு சிலர் தாம் விரும்பிய பலவித வேடங்களை ஆண்டுதோறும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்கின்றனர். எந்த வேடம் போடுவதற்கும் யாருக்கும் தடை இல்லை என்பதால், எல்லா வேடங்களையும் பக்தர்கள் போட்டுக் கொள்கின்றனர்.

வேடம் போடத் தொடங்கும் நாளன்று குழுவில் உள்ள அனைவரும் குலசேகரன்பட்டினம் சென்று, கடலில் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். பின் குழுவாக ஊருக்குத் திரும்பி வேடம் போடத் தொடங்குவார்கள்.

வேடம் போட்டதும் தம் இருப்பிடத்தில் அல்லது கோவிலில் உள்ள அம்மனுக்குப் பூசை செய்து, தமது ஆட்டத்தைத் தொடங்குவார்கள். சூரசம்ஹாரம் வரை இவர்கள் குழுவாகவே செயல்படுவார்கள்.

வேடம் அணிவதற்குப் பயன்படுத்தும் பொருட்களை யாரும் தொடாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்வார்கள். தீட்டு எனக் கருதப்படும் இடங்களுக்கு இவர்கள் செல்வதில்லை.

தசராக் குழுக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த ஊர்மக்களும் நடத்துகொள்வதுண்டு. அவர்களுக்கு இடையூறு நேராத வகையிலும் அவர்களின் பக்திக்கு ஏற்ற முறையிலும் ஊர்மக்களின் நடவடிக்கைகள் காணப்படும்.

தசரா குழுவினர் நோன்பு தொடங்கிய நாள் முதல் வேடம்போடுதல், ஊர் ஊராக செல்லுதல், காணிக்கை வசூலித்தல், அருள் வாக்கு கூறுதல், மேளதாளங்களுடனும் கலைஞர்களுடனும் இணைந்து ஆட்டங்களை நிகழ்த்துதல் போன்றவற்றை செய்வார்கள். இதனால் தசரா குழுவினர் எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மாறிவிடும்.

இந்த கிராமியத் திருவிழா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமே ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் அற்புத திருவிழாவாகும். மற்ற மாவட்டத்துக்காரர்கள் இந்த வித்தியாசமான திருவிழாவின் மகத்துவத்தை ரசித்து பார்க்க வேண்டுமானால்  குலசேகரன் பட்டினத்துக்கு சென்றால் பார்க்கலாம். இது அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு திருவிழாவாக இருக்கும். 

Tags:    

Similar News