- வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள்.
- அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும்,எந்த பாதிப்பும் ஏற்படாது.
இரும்பு ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்துக்கு பல்வேறு வேடம் அணிந்து வரும் பக்தர்களிடம் ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் ஏற்பட்டபடி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆடை, அலங்காரத்துக்கு பக்தர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
அதன்பிறகு அட்டைகள், கலர் தாள்களினால் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் பக்தர்களிடம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நிஜ பொருட்களையே பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
அதாவது ஒருவர் சூலாயுதம், வேலாயுதம் ஏந்தி வரும் வகையில் வேடம் போட்டால், உண்மையான இரும்பு சூலாயுதம், வேலாயுதத்தை பயன்படுத்துகிறார்கள். இது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
குலசேகரப்பட்டினம் ஆலயத்தை பொருத்தவரை வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள். அப்படி வரும் போது உண்மையான இரும்பு ஆயுதங்கள் மற்றவர்களை பாதித்து விடுகிறது.
அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே வேடம் அணிந்து வருபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒலி பெருக்கி குழாய் வேண்டாம்
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் வந்து மகிஷனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த சூரசம்ஹாரத்தை காண குலசேகரன்பட்டினத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றிரவு குலசையில் திரும்பிய திசையெல்லாம் தசரா குழுக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்களப்படும். அந்த சமயத்தில் தசரா குழுவினர் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சம்ஹாரம் தொடங்குவதற்கு முன்பு கோவிலில் இருந்து நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும். எல்லா தசரா குழுவினரும் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்தினால், ஆலயத்தில் இருந்து வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் பக்தர்களுக்கு கேட்காமல் போக வாய்ப்புள்ளது.
எனவே தசரா குழுவினர் ஒலி பெருக்கி குழாய்களுக்கு பதில், ஒலிபெருக்கி பெட்டிகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.