ஆன்மிக களஞ்சியம்

மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பைரவர்

Published On 2024-05-28 10:57 GMT   |   Update On 2024-05-28 10:57 GMT
  • அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.
  • இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

இதுதான் தக்க சமயம் என உணர்ந்த ஸ்ரீகால பைரவர் தன் அஷ்டபுஜங்கள் (எட்டு கரங்கள்) சுன வாகனம் (நாய் வாகனம்) முதலியவற்றை கைவிட்டு ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாக தன்னை மாற்றிக் கொண்டு சில பசுக்களையும் சிருஷ்டித்துக் கொண்டு அவற்றை மேய்ப்பவன் போல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முன்பாக நடமாடினார்.

அச்சிறுவனைக் கண்ட ஆஞ்சநேயர், "தம்பி, தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயாக" என்று கேட்டுக் கொண்டார்.

சிறுவன் வடிவில் இருந்த சேத்திர பாலரும் தன்னுடன் மாருதியை, காளிங்க மடுகின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

காளிங்க மடுகு, சுவையான தண்ணீருடன் கடல் போல் நிரம்பி இருப்பதைக் கண்ட ஆஞ்சநேயர் மிகுந்த ஆனந்தம் அடைந்தார்.

அதிக தாகத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் மனமகிழ்ந்து, "சிறுவனே, இந்த சுயம்பு லிங்கத்தைச் சற்று நேரம் வைத்திருப்பாயாக.

இதைக் கீழே வைக்கக்கூடாது.

நான் தாக சாந்தி செய்து கொண்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார்.

அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.

இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

அதற்கு மாருதி, "பயப்படாதே, இது பாரமாக இல்லாதவாறு யான் உனக்கு வரம் அளிக்கிறேன்" என்று கூறினார்.

அந்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் வடிவில் இருக்கும் பைரவர் மாருதியிடம் இருந்து அந்த சிவலிங்கத்தை வாங்கிக் கொண்டார்.

"ஐயா தாங்கள் விரைவில் வந்து சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.

என்னால் அதிக நேரம் பாரம் தாங்க முடியாது. அப்படி தாங்க முடியாமல் போனால் சிவலிங்கத்தைக் கீழே வைத்துவிட நேரிடும்" என்று தன் எண்ணத்தை மறைமுகமாகத் தெரிவித்தார்.

தான் வரமளித்தும் சிறுவன் பயப்படுகிறானே என்று நினைத்த மாருதி விரைவில் சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ளவே எண்ணினார்.

ஏனெனில், முகூர்த்த லக்னம் வேறு நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவராய் மடுகில் இறங்கி, தாகம் தீரும் வரை நீரை அருந்தினார். பின்னர் "அப்பாடா என்று ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.

அவசரமாக சற்றே நீராடிக் களைப்பையும் போக்கிக் கொண்டார்.

இதற்குள் அந்த சிறுவன் வடிவில் இருந்த கால பைரவர், தான் திட்டமிட்டபடியே, அந்த மடுகுக் கரையில் ஏற்கனவே நிர்ணயம் செய்திருந்த இடத்தில் அந்த சுயம்பு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டார்.

"பாரம் தாங்க முடியாததால் லிங்கத்தை பூமி மீது வைத்து விட்டேன்" என்று உரக்கக் கூறி விட்டு மறைந்து விட்டார்.

Tags:    

Similar News