- இறைவழிபாட்டுக்கு என பொதுவான மலர்கள் பல உள்ளன.
- பல பூக்களை வழிபாட்டுக்கு இப்போது நாம் பயன்படுத்துவதில்லை.
மங்களம் தரும் மலர்கள்
இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ, அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது.
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு வித, விதமான மலர்களை சூடி அழகு பார்த்தனர். அர்ச்சனை செய்தனர். இதை பழங்கால பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இறை மூர்த்தங்கள் மலர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதில் நம் மூதாதையர்கள் உறுதியுடன் இருந்தனர். இதன் காரணமாகவே ஆலயங்கள் அருகே தீர்த்த குளத்தையும், நந்தவனத்தையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தனர்.
சில குறிப்பிட்ட மலர்கள், அறிவியல் பூர்வமாக மனித குலத்துக்கு நன்மை செய்வதை ஆதி தமிழர்கள் அறிந்து இருந்தனர். தாமரை மலர்த்தண்டு குளோரின் வாயு உற்பத்தி செய்வதை கண்டுபிடித்திருந்தனர்.
எனவே குறிப்பிட்ட மலர்களை இறை வழிபாடு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்தனர்.
குவளை மலரை பறித்து பயன்படுத்தக் கூடாது என்ற விதி இப்படித்தான் ஏற்படுத்தப்பட்டது. உலகில் உள்ள இயற்கை படைப்புகள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில், மலர்கள் இறைவனுக்கு உகந்தவைகளாக உள்ளன.
இயற்கையின் படைப்பில் மலர்களின் இயல்பைப் பார்த்தால் அவற்றின் தியாகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். ஓரிரு நாட்களே ஆயுள் கொண்ட மலர்கள் இறைவனுக்காகவே பூத்ததோ என்று எண்ணத் தோன்றும்.
ஆலயங்களில் நறுமணம் ஏற்படுத்தவும், அலங்காரம் செய்யவும், ஆத்மார்த்தமாக வழிபடவும் மலர்களின் பங்களிப்பு நிகரற்றது. மலர்கள் இல்லாத வழிபாட்டை நினைத்துப் பார்க்க இயலாது.
மகிமைகள் பல நிறைந்த பூக்களை, இறைவழி பாட்டுக்கு சங்க கால தமிழர்கள் பயன்படுத்தியதற்கும், நாம் பயன்படுத்தியதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
சங்க காலத்தில் 99 வகையான பூக்கள் பயன்பாட்டில் இருந்ததை கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் 261 அடிகள் கொண்ட பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த 99 வகை பூக்களில் பல இன்று காணாமல் போய் விட்டன. பல பூக்களை வழிபாட்டுக்கு இப்போது நாம் பயன்படுத்துவதில்லை. மிக சொற்பமான வகை மலர்களையே நாம் பயன்படுத்துகிறோம்.
புராணங்கள் புனையப்பட்ட பிறகு ஒவ்வொரு கடவுளுக்கும், இந்தந்த வகை பூக்களையே பயன்படுத்த வேண்டும் என்ற நியதி உருவாகி விட்டது.
எனவே சில வகை மலர்களின் பயன்பாடு குறைந்து போனது.
என்றாலும் இறைவழிபாட்டுக்கு என பொதுவான மலர்கள் பல உள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் பூக்கும் இந்த மலர்கள் இன்று இறைவழிபாட்டை அர்த்தமுள்ளதாக, ஆத்மார்த்தமானதாக மாற்றியுள்ளன.
காய்ந்து போன மலர்கள், மனிதர்களால் முகர்ந்து பார்க்கப்பட்ட மலர்களை ஒரு போதும் இறை வழிபாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது. அது போல் சுத்தம் இல்லாத இடத்தில் உள்ள பூக்களை தொடவே கூடாது.
மலர்களை இறைவனுக்கு படைக்கும்போது கிள்ளி சாத்தக்கூடாது. முழு மலராகவே சாத்தவேண்டும். இலைகளை கிள்ளி சாத்தலாம். வில்வம், துளசி ஆகியவற்றை தளமாகவே படைக்க வேண்டும்.
இந்த வரிசையில் எந்தெந்த மலர்களை, எந்தெந்த தெய்வத்துக்கு, எந்தெந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் சில முறைகளை வகுத்து வைத்துள்ளனர்.
காலை வழிபாட்டின் போது தாமரை, துளசி, மல்லிகை, நந்தியாவட்டை, முல்லை, மந்தாரை, செண்பகம் ஆகிய மலர்களை கொண்டு வழிபடலாம்.
மதிய நேரத்தில் துளசி, வில்வம், சங்கு புஷ்பம், அரளி, வெண்தாமரை, ஓரிதழ் தாமரை, மருதாணி ஆகியவற்றை கொண்டு பூஜை செய்வது நல்லது.
மாலை நேரத்தில் ஜாதிமுல்லை, துளசி, வில்வம், செந்தாமரை, அல்லி, மல்லிகை, மரிக்கொழுந்து போன்ற பூக்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டால் மங்களம் உண்டாகும்.
இத்தனை வகை மலர்களில் தாமரைப்பூதான் மிக, மிக சிறப்பானதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமால், மகாலட்சுமியின் மனம் கவர்ந்த தாமரை பூவுக்கு "தெய்வ மலர்" என்றும் ஒரு பெயர் உண்டு.
அதனால்தான் தாமரைப் பூவை பெண்கள் தலையில் சூட அனுமதிக்கப்படுவதில்லை. திருமாலுக்கு தாமரை போல பவளமல்லி, சாமந்தி ஆகிய மலர்களும் மிகவும் பிடித்தமானதாகும்.
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது நாகலிங்கப்பூவும், வில்வவுமாகும். முருகப்பெருமானுக்கு கடம்ப மலர், குறிஞ்சிப் பூ, செவ்வலரி பூ ஆகிய பூக்கள் மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விநாயகருக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா மலர்கள் மிகவும் பிடித்தமானது. அம்மனுக்கு செவ்வரளி, மல்லிகை மிகவும் உகந்தது. இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த பூ எது என்பதை அறிந்து கொண்டு படைக்க வேண்டும்.
அதுதான் இறை அருளை முழுமையாக பெற உதவும்.
இறைவனுக்கு பிடித்தம் இல்லாத, விருப்பம் இல்லாத பூக்களை ஒரு போதும் படைக்க கூடாது.
எனவே எந்தெந்த தெய்வத்துக்கு எந்தெந்த பூக்கள் பிடிக்காது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியவை பெருமாளுக்கு பிடிக்காது.
செம்பரத்தை, தாழம்பு, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவையாகும். மந்தாரம், அறுகு வெள்ளெருக்கு ஆகியவை அம்மனுக்கு படைக்க உகந்தது அல்ல.
சூரிய வழிபாடு செய்யும் போது மறந்தும் கூட வில்வத்தை படைத்து விடக்கூடாது. அது போல விநாயகருக்கு துளசி ஆகாது. பவளமல்லி சரஸ்வதி தேவிக்கு பிடிக்காத பூவாகும்.
சில பூக்களை எந்த சாமிக்கும், எப்போதும் பயன்படுத்த கூடாது என்று விதி உள்ளது. உதாரணத்துக்கு துலுக்க சாமந்திப்பூவை சாமிக்கு படைக்கக்கூடாது.
அது போல வானகமலர், மாதுளை மலர், பூசணிபூ, மலை ஆலமரப்பூ, பொன்னாங்கண்ணி பூ, விளாபுளி பூ, குமிழம் பூ, குருகத்தி பூ ஆகிய பூக்களை பூஜைக்கு ஒரு போதும் பயன்படுத்தவே கூடாது.
பூஜைக்கு விலக்கப்பட்ட இந்த பூக்களை சில ஊர்களில் ஆலய பிரகார அலங்காரத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கடம்ப மலர், ஊமத்தை பூக்களை இரவு பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாழம்பூவை அர்த்தசாம பூஜைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
பகலில் தாழம்பூவை பயன்படுத்தக்கூடாது. (உத்தரகோசமங்கை தலத்தில் மட்டும் விதி விலக்காக தாழம்பூ பயன்படுத்துகிறார்கள்)
பூக்களின் நிறத்துக்கும் வழிபாட்டுக்கும் கூட தொடர்பு உள்ளது.
வெண்மை நிறம் கொண்ட பூக்களை அர்ச்சித்து வழிபட்டால் முக்தி உண்டாகும். சிவப்பு வர்ண பூக்கள் வழிபாடு இன்பத்தை தரும்.
மஞ்சள் வண்ண பூக்களை இறைவனுக்கு படைத்தால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் விருத்தி ஏற்படும்.
பொதுவாக அன்று பறித்த மலர்களை அன்றே பூஜைக்கு பயன் படுத்தி விட வேண்டும். சிலர் இரவில் பூ வாங்கி மறுநாள் காலை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். அதில் எந்த தவறும் இல்லை.
தாமரை பூவை 5 நாட்கள் வரை வைத்து கூட பூஜிக்கலாம். அரளிப்பூக்களை 3 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். அது போல விஷ்ணு கிரந்தி பூவையும் மூன்று நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
செண்பகம், சாமந்தி, மல்லி பூக்களை ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும். இறைவனுக்கு படைக்கும் மலர், இலைகளில் துளசி, வில்வம் இரண்டு மட்டும் விதிவிலக்கு பெற்றவை. விஷ்ணுவுக்கு மிக, மிக பிடித்தமான துளசியை மூன்று மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
சிவனுக்கு மிகவும் பிடித்தமான வில்வத்தை 6 மாதம் வரை கூட பயன்படுத்தலாம். வில்வ இலையை எத்தனை தடவை வேண்டுமானாலும் தண்ணீரில் சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
சிவன் அதை ஏற்று அருள் புரிவார். வில்வத்துக்கு மட்டும் அந்த சிறப்பை சிவபெருமான் கொடுத்துள்ளார்.