ஆன்மிக களஞ்சியம்

முகுந்தா... முகுந்தா...

Published On 2023-12-08 12:31 GMT   |   Update On 2023-12-08 12:31 GMT
  • விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.
  • தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

"எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்" என்று

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.

விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.

அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.

வட இந்தியாவில் 'ஜென்மாஷ்டமி' என்று இது அழைக்கப்படுகிறது.

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின்

சிறைச்சாலையில் இருந்த வசுதேவர் தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் அவதரித்தார்.

3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும் ,

8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.

தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.

நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கிருஷ்ணர், ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை

அவிழ்த்து விடுவது... நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது...

வெண்ணையை திருடி உண்பது... போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.

கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வட இந்தியாவில் இரவு 12 மணி வரையிலும்

உபவாசம் இருந்து, பஜனை செய்வார்கள்.

ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று

கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை தவறாது நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்து திரிந்த கண்ணன், பகல் நேரம் முழுவதும் மாடுகளை நன்றாக மேய்த்து விட்டு

மாலை நேரத்தில் தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதனால் மாலை நேரம்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.

Tags:    

Similar News