- குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
- தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.
திருமுருகன் சீரலை வாயில் சூரபத்மனையும், அசுரர்களையும் அழித்துத் தேவர்களின் துயரைத் துடைத்தார்.
துயர் நீங்கப் பெற்ற தேவர் தலைவன் இந்திரன் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தன் புதல்வியாகிய தேவசேனா தேவியை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான்.
திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு பெண்கள், திருமுருகனது அழகில் மயங்கி அவனையே அடைய வேண்டுமெனத் தவமிருந்தார்கள்.
அவர்களுள் அமிர்தவல்லி இந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் வளர்ந்தாள்.
தேவர்கள் சேனைக்கு அதிபதியான செந்தமிழ் முருகன் தேவசேனையைத் திருப்பரங்குன்றத்தில் வைத்துத் திருமணம் முடித்துக் கொண்டார்.
தேவசேனைக்குத் திருமணம் நடந்த இத்திருத்தலத்தில் மற்றொரு அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான் திருமுருகன்.
பெரும்புலவர் நக்கீரர் தலயாத்திரை செய்து வருகின்ற போது திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக்கரையில் உட்கார்ந்து நித்ய பூஜா அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார்.
குளக் கரையிலிருந்த அரசமரத்து இலை ஒன்று உதிர்ந்து பாதி நீரிலும் பாதி தரையிலும் விழுந்தது.
நீரில் விழுந்த பகுதி மீனாகவும், தரையில் விபந்த பகுதி பறவையாகவும் மாறின.
ஒன்றையன்று இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன.
இந்த சலசலப்பால் நக்கீரனது அனுஷ்டானம் கலைந்து போயிற்று.
உடனே கற்கிமுகி என்ற பூதம் நக்கீரரை மலைக்குகை ஒன்றில் சிறை வைத்தது.
குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
ஆயிரம் பேர் சிறையில் சேரக் காத்திருந்த கற்கிமுகி ஒருசேர அத்தனை பேரையும் விழுங்கிப் பசியாறக் காத்திருந்ததாம்.
நக்கீரர் திருமுருகனை மனத்திலிருந்து திருமுருகாற்றுப் படையைப் பாடியவுடன் அக்குகையைப் பிளந்து அத்துணை பேருக்கும் விடுதலை நல்கி, பூதத்தையும் திருமுருகன் அழித்ததாகத் திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்துள்ளார் நக்கீரர்.
திருப்பரங்குன்றத்துப் பதியிலே நடந்த தேவசேனா தேவியின் திருமணத்திற்கு பிரம்மா திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தவும், சூரியனும், சந்திரனும், ரத்தின தீபங்கள் தாங்கி நிற்கவும்,
உமையம்மையும், தென்னவர்கோன் பரமேசுவரனும் இணையாக நின்று வாழ்த்திக் களிக்கவும், ஆயிரங் கண்ணுடைய இந்திரன் தகப்பனார் கடமையாக தாரை நீர் வார்த்துக் கொடுக்கவும், தேவியைக் கரம் பிடித்தான் பரகுன்றத்துக் குமரன்.
திருமுருகன் திருப்பரங்குன்றத்தில் தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.
எனவேதான் இவ்விழாவைப் பெரிய திருவிழாவாக, பிரமோத்சவமாக இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.