நம் ஆத்மா திருப்தியடைய என்ன செய்ய வேண்டும்?
- நோய் பயம் நீங்கவும், புத்துணர்ச்சியுடன் வாழ்வை கொண்டு செல்லவும் இறைவழிபாடு முக்கியமானது.
- இறைவழிபாடு செய்து வந்தால்தான் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.
பல புதுப்புது வியாதிகள் மனிதர்களை தாக்கி வரும் இந்த காலகட்டத்தில் எத்தனையோ மருத்துவ வளர்ச்சி இருந்தாலும் தெய்வ வழிபாடிலும் மக்கள் நம்பிக்கை அதிகமாக உள்ளது.
திக்கற்றவர்களுக்கு தெய்வம்தான் துணை என்று சொல்வார்கள்.
ஆம்.... நம் ஒவ்வொருவருக்கும் தெய்வம்தான் துணை.
நோய் பயம் நீங்கவும், புத்துணர்ச்சியுடன் வாழ்வை கொண்டு செல்லவும் இறைவழிபாடு முக்கியமானது.
இறைவழிபாடு செய்து வந்தால்தான் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.
புதிய தன்னம்பிக்கை வரும். எனவே வீட்டிலேயே வழிபாட்டை உற்சாகத்துடன் தொடங்குவோம்.
விரைவில் ஆடி மாதம் பிறக்க இருக்கிறது.
எனவே, தினசரி பூஜைகளில் நம்மை ஈடுபடுத்த வேண்டும்.
பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் வந்து அலை மோதும்.
மாலை வந்ததும், பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்.
மனதுக்கும் அமைதி கிடைக்கும்.
அந்த சந்தர்ப்பத்தில் பகவானிடம் "பகவானே... நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்" என்று பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.
பிறருக்காக உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், குடும்பத்தை கவனிக்கிறோம்.
இதெல்லாம் ஒரு கடமை. அதே போல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும் சுலபமான வழி பகவானை வழிபடுவதுதான்.
மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய கால அளவு கொண்டது. இந்த குறுகிய காலத்துக்குள் நாம் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில் ஆனந்தமாக செலவிடுவதே நம்மை உயர்நிலைக்கு அழைத்து செல்லும்.
இந்த பிறவியில் நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.
அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட இயல்பைக் கொண்டது. ஆனால் எல்லாவற்றிலும் நம் ஆத்மா மகிழ்ச்சி அடையாது.
நமது ஆத்மா திருப்தி அடைய வேண்டுமானால், இந்த பிறவியில் நமக்கு உயிரையும், அழகான உடம்பையும் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நமக்கு கிடைத்த எல்லா பொருட்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் வேண்டும்.
இதற்காகதான் நம் முன்னோர்கள் ஆலயங்களை கட்டினார்கள்.
ஆனால் கடந்த சில மாத வாழ்க்கை சூழலில் தினமும் ஆலயத்துக்கு செல்ல இயல்வதில்லை.
எனவே வீட்டில் பூஜை செய்து இறைவனுக்கு நாம் அர்ப்பணிக்கலாம்.