ஆன்மிக களஞ்சியம்

நவக்கிரகங்கள்-ராகு கேது!

Published On 2023-08-20 12:42 GMT   |   Update On 2023-08-20 12:42 GMT
  • தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.
  • மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.

ராகு-கேது

ராகு - கேது என்றாலே மக்களுக்கு ஏற்படக்கூடியது ஒரு பயமும் பதற்றமும் தான்.

ஆனால், ராகு - கேதுக்கள், இரு துருவங்களாக செயல்பட்டு பூர்வ புண்ணியத்தின் கர்ம வினைகளை, இடத்திற்கு அல்லது வயதிற்கு தகுந்தாற்போல் அதனுடைய பாவபலன்களை அப்படியே கொடுக்கும்.

தாத்தா - பாட்டியின் பிரதிபலிப்பே ஒரு மனிதனுடைய பூர்வ புண்ணியமாக கருதப்படுகிறது.

தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.

தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கர்ம வினைகள் குறிப்பிட்ட காலத்தில் நல்லவைகளையும், குறிப்பிட்ட காலத்தில் தீயவைகளையும், உணர்த்துவதிலும் உணர வைப்பதிலும் ராகு - கேதுக்களே முதன்மையானது.

ஒருவருடைய மன நிலையில் அகம் - புறம் சார்ந்த செயல்பாடுகளிலும் கூட ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.

வெளிப்புற பொருட்கள் வாங்குவதில், ஏற்படக்கூடிய, எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள், பேராசைகள் காரணத்தால், உடலின் புறப்பொருட்கள் மூலமாக தண்டனை அனுபவிப்பார். இதுவே ராகுவின் தன்மை, இது ஒரு மாயை.

உதாரணமாக, பேனா வாங்க வேண்டும் என்று மாணவனுக்கு ஆசை. ஆனால், பணம் அப்பாவிடம் கேட்டால் திட்டுவார் என்ற மனநிலை.

இந்த நிலைகளையும், ஒரே நேரத்தில், ஸ்தம்பித்து, ஒருவருடைய ஆசையையும், ஆசையினால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளையும், ஒப்பீடு செய்து, ஒரு குழப்ப நிலையை, ஏற்படுத்துவதில் இந்த ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.

அகப்பொருளில், ஆத்ம நிலையை அடைய முயற்சிப்பதும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தம், சித்தப் பிரமை நிலையை ஏற்படுத்தி, ஒரு மயக்க நிலையை கொண்டு வரும். இவை அனைத்தும் கேதுவின் தன்மையே.

இதுவும் கூட ஒரு மாயையின் வெளிப்பாடுதான்.

ஆக, புறத்தன்மை மற்றம் அகத்தன்மையிலும் ஏற்படக்கூடிய மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.

ராகு – கேது தோஷம் பற்றி

இன்றைய நவீன உலகத்தில், பல திருமண வாழ்க்கையில், ஜாதக குறிப்பில் ராகு கேது தோஷம் என குறிப்பிடப்படுள்ளது.

ராகு - கேது தோஷம் என்பது பொதுவாக, எதிர்பார்ப்புகள், இல்லாத ஒன்றை கற்பனையாக இருப்பதுபோல் எண்ணுதல், அதீத ஆசைப்படுதல் ஆகிய ஒரு மாய பிம்பம் போன்ற குணங்களை குறிப்பது ராகுவின் தன்மையாகவும்,

கேது என்பது எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத, மற்றவர்கள் அனுபவிப்பதை பார்த்து தன் மனதிற்குள் பொங்குதல், இருப்பதை உணராதது, தன்னிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பது, மற்றவர்களுடன் ஒப்பிடுதல், இவை எதுவும் வெளியில் தெரியாமல் இருத்தல், தனக்குத் தானே சூன்யம் வைத்து கொள்ளுதல் போன்ற தன்மைகள் என குறிப்பிடலாம்.

பாரம்பரிய ஜோதிடத்தில் லக்னத்திலோ, இரண்டிலேயோ, ஏழிலேயோ, அல்லது 8-ல் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள, எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் அதீத எதிர்பார்ப்பும்,

எதிர்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் எதிர்பார்ப்பே இல்லாமலும், இந்த ராகு கேதுக்கள் திருமணத்தில் பங்களிப்பு அதிகமாக எடுத்துக் கொண்டு, தோஷமாக கருதப்படுகிறது.

ஆனால், எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் எதிர்பார்ப்பு இல்லாமலும், எதிர்ப்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவுக்கு எதிர்பார்ப்புடனும் இருந்தால், திருமண வாழ்வு சிறக்கும்.

உதாரணமாக, ஒரு ஆண் வரதட்சணையாக 100 சவரன் தங்க நகை வேண்டும் என பேராசைப்படுகிறான்.

அப்போது அந்த திருமணம் தடையாகிறது. ஒரு ஜாதகர், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நல்ல வரன் அமைந்தால் போதும் என்பதால், எதிர்பாலினர் ஆணிடமோ பெண்ணிடமோ ஏதோ குறை உள்ளது என்ற சந்தேகத்திற்கு ஆளகிறார்கள்.

அதுவே மிகப் பெரிய தடையாகிறது. ஆக, பேராசையும், சந்தேகமும் ராகு கேதுக்களுடைய தன்மையாக மிகப் பெரிய தடையை ஏற்படுத்துகிறது.

ஆனால், இன்றைய வளர்ச்சியின் காரணத்தால், திருமண பொருத்தத்தில் ராகு கேதுக்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கை ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

ஒருவர் கேட்ட கேள்வி, "ஜென்ம லக்னத்தில் ராகு கேது இருப்பதால், தோஷம் என்று சொன்னார்கள், ஆனால், திருமணம் தகுந்த காலத்தில் நடந்து, திருமண வாழக்கை நன்றாகவே இருக்கிறார்களே,

மேலும் வேறு ஒருவருடைய, ஜாதகத்தில் ராகு கேது தோஷமே இல்லை, ஆனால் திருமண வாழ்க்கை எதிர்பார்த்த மாதிரி நல்லவிதமாகவும் இல்லை, அது எப்படி, எதனால்" என்று கேட்டார்.

அப்படி, திருமணமாகி பிரச்சினையான ஜாதகமும் இருக்கிறது. அதற்கு ராகு கேதுவின் தாக்கம் தான் காரணம், என்றே தவறான புரிதலில் இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, சரியான புரிதலுடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.

ஜென்ம லக்னத்தில், ராகுவோ, கேதுவோ லக்னத்தில் இருந்தால், ராகு கேது தோஷத்தால், திருமணம் பாதிக்கும் என்ற கூற்று நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.

கிரகங்கள் கொடுத்து கொண்டேதான் இருக்கும். அதை வாங்குவதற்கான, நம்பிக்கை இல்லாமையும், பொறுமை இல்லாமையும், இயலாமையும்தான் ஒரு காரணிகளாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்குகிறது எனலாம்.

உதாரணமாக, நன்றாக படிக்கக் கூடிய மாணவனை, உனக்கு புரியாது மற்றும் உனக்கு முடியாது, நீ அடி முட்டாள் என்று திரும்ப திரும்ப சொல்லும்போது,

அந்த மாணவன் மன அளவிலும் உடல் அளவிலும், சோர்வு தன்மையும், மறதியும், தன்னை ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கிக்கொண்டு விளங்குவதையும்,

அதே வகுப்பில் ஒரு சராசரி குழந்தையை உன்னால் முடியும், நீ முயற்சி செய், கண்டிப்பாக உன்னால் வெற்றி பெற முடியும் என்று சொல்லும் போது, மிகப் பெரிய புத்திசாலியாவதையும் பார்க்கலாம்.

இந்த நிகழ்வில், ராகு - கேது பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பார்ப்போம்.

நல்லவித எண்ணங்களாலும், வார்த்தைகளாலும் ஒருவரை நல்லவராகவும், திட்டும் போது கெட்டவராகவும் எதிரியாகவும் மனம் பாவிக்கும்.

அதேபோல்தான், இந்த ராகு கேதுக்கள், கொடுக்கமாட்டார், துன்புறத்துவார், கஷ்டங்களை கொடுப்பார் என்று கிரகங்களை சொல்லும் போது, இந்த எதிர்மறையான வார்த்தைகளும், எண்ணங்களும் ஒருவர் மனங்களில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதே போல் கிரகங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மக்களின் அதிருப்திக்கு காரணம் அவர்களுடைய எதிர்பார்ப்பின் அளவுகோலே. ஆனால், ராகு கேதுக்கள் அதீத யோகத்தை தரக் கூடியவர்களே.

Tags:    

Similar News