- படைப்புத் தொழிலின் முதல்வரே! எங்களை மன்னிக்க வேண்டும்.
- மற்ற நாட்களில் உணவின்றி நோன்பு இருக்க வேண்டும்.
சாபமொழி கேட்ட நவக்கிரகங்கள் இடி ஒலி கேட்ட பாம்பு போல உடல் பதைத்து, உள்ளம் நைந்து வருந்தி, பிரம தேவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.
"படைப்புத் தொழிலின் முதல்வரே! எங்களை மன்னிக்க வேண்டும்.
காலவ முனிவரின் தவத்தின் சுவாலை எம்முடைய மண்டலங்களை அடைந்து சுட்டெரிக்கத் தொடங்கியது.
அதனால் அவர் முன் சென்று அவர் கேட்ட வரத்தைத் தந்து விட்டோம்.
அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து, தங்களின் சாபத்துக்கு விமோசனம் கூற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.
அதுகேட்டு மனம் இரங்கிய பிரமதேவர், "நவக்கிரக நாயகர்களே! நீங்கள் நம்முடைய கட்டளையை மீறி நடந்தமையால், அந்தச் சாபம் பெற்றீர்கள்.
ஆயினும் சாபவிமோசனம் கேட்டு நிற்பதால் ஒரு வழி கூறுகிறோம்.
நீங்கள் பூலோகத்திற்குச் சென்று புண்ணிய பூமியான பரத கண்டத்தை அடைந்து, தென் பாரதமான தமிழ்நாட்டு காவிரியாற்றின் வடகரையை அணுகுங்கள்.
அங்கே அர்க்காவனம் என்ற வெள்ளெருக்கங்காடு ஒன்று உள்ளது. அங்கே தங்கியிருந்து தவம் புரியுங்கள்.
கார்த்திகை மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிப் பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை முடிய எழுபத்தெட்டு நாட்கள் தவம் புரிய வேண்டும்.
திங்கட்கிழமை தோறும் உதயத்துக்கு முன்னராகக் காவிரியில் நீராடிப் பிராணநாதரையும், மங்கல நாயகியையும் வழிபட வேண்டும்.
உதயாதி ஏழு நாழிகைக்குள் அர்க்க இலை (வெள்ளெருக்கு இலை)யில் ஒரு பிடி அளவு தயிர் அன்னம் வைத்து அதைப் புசிக்க வேண்டும்.
மற்ற நாட்களில் உணவின்றி நோன்பு இருக்க வேண்டும்.
இவ்வரிசி நோன்பைச் சிறிதளவு தவறும் நேராமல் செய்து வந்தால் சாப விமோசனம் கிடைக்கும்" என்று பிரமதேவர் சொன்னார்.