ஆன்மிக களஞ்சியம்

பிறப்பறுக்க வேண்டுமா?

Published On 2024-02-04 12:23 GMT   |   Update On 2024-02-04 12:23 GMT
  • எல்லோருக்கும் பொதுவாக பிறப்பின்மையே தலையாய வரமாக இருக்கும்.
  • சிவனைப் பற்றினாலேயன்றி உய்வதற்கு வேறு வழி கிடையாது.

எல்லோருக்கும் பொதுவாக பிறப்பின்மையே தலையாய வரமாக இருக்கும்.

ஏனென்றால் பூவுலகத்தில் படும் துன்பங்களைக் கண்டு கடவுளே இனி எனக்கு பிறவியே வேண்டாம் என்று முறையிடுபவர்கள்தான் அதிகம்.

பிறப்பும், இறப்பும் அற்ற ஒருவனால் மட்டுமே, மற்ற உயிர்களின் பிறப்பறுக்க முடியும்.

அப்படிப்பட்ட பிறப்பறுக்கக்கூடிய ஒருவனே நம் சிவபெருமான் ஆவான்.

சிவபெருமானிடம் வேண்டுவது எல்லாம் எப்பிறப்பும் உய்யும் வழியாக, இப்பிறப்பில் அடிமைப்பட்டு அவனுக்கே ஆளாகி, பிறப்பறுக்க வேண்டுவது ஒன்றே ஆகும்.

நாம் செய்யும் நல்வினை, தீவினை காரணமாக நமக்கு இப்பிறவியில் முத்தி கிட்டலாம்.

இப்பிறவியில் பிறப்பறுக்க வேண்டுவது அல்லாமல் இனி எப்பிறவி வந்தாலும், அப்பிறவியிலும் பிறப்பறுக்க வேண்டுவது ஒன்றே முத்திக்கு வழியாகும்.

சிவனைப் பற்றினாலேயன்றி உய்வதற்கு வேறு வழி கிடையாது.

அவனே அனைத்திற்கும், முதலும் முடிவுமாய், முடிவும் முதலுமாய் விளங்குகின்றான்.

அடியார்களின் வினைகளை அகற்றுவதற்காக ஆண்டவன் திரிசூலத்தை ஏந்திக்கொண்டு இருக்கிறான்.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய முச்சக்திகளும், மூவிலைச் சூலமாகும்.

முன்பிறவியில் செய்த நன்மைகள் காரணமாக, ஒவ்வொரு பிறப்பிலும் சிறிது சிறிதாக அருள் பெற்று ஞானியர் நிலையினை அடைந்து பக்குவமடைய அவனுக்கு எத்தனையோ பிறவிகள் தேவைப்படலாம்.

அடியார்களின் வினைகளை அகற்றுவதற்காக ஆண்டவன் திரிசூலத்தை ஏந்திக் கொண்டு இருக்கிறான்.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய முச்சக்திகளும், மூவிலைச் சூலமாகும்.

காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் மூவிலைச் சூலத்தால் நீக்கி அடியார்களை ஆட்கொள்வான்.

எனவே ஈசனிடம் தஞ்சம் புகுந்து அவன் அருளைப் பெற்று பயன்பெற வேண்டும்.

சமய குரவர்களும், சைவ சமய அருளாளர்களும், அடியார்களும் ஓதி உணர்ந்து பேரின்பம் அடைந்தது நமசிவாய எனும் ஐந்தெழுத்தாகும்.

அனைவரும் இந்த ஐந்தெழுத்தாகிய பஞ்சாக்சரத்தையே தெப்பமாகக் கொண்டு பிறவிக் கடலைக் கடந்து பேரின்பத்தில் திளைத்து முத்தி பெற்றிருக்கின்றனர்.

ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருள் முறைப்படி அமைந்துள்ளது.

சிவன்-சி, அருள்-வா, ஆவி-ய, திரோம்-ந, மலம்-ம.

"சிவயநம" என்னும் சொல்லுக்கு முறையாக, உய்த்துணர்தல், சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு என்பதாகும்.

சி-சிறப்பு, வ-வனப்பு, ய-யாப்பு, ந-நடப்பு, ம-மறைப்பு.

ஐந்தெழுத்தை ஆர்வமுடனும், அன்புடனும் ஓதி உய்வீர் என்று முன்னோர்கள் உலக மக்களுக்கு உணர்த்திச் சென்றுள்ளனர்.

'சிவசிவ என்கிலர் தீவினை யாளர்

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவரு மாவர்

சிவசிவ என்னச் சிவகதி தானே' என்கிறார் திருமூலர்.

இது உலகில் உள்ள ஏனைய மந்திரத்திற்கெல்லாம் தாயாக உள்ளது.

பிறப்பும்-இறப்பும், வாழ்வும்-தாழ்வும், இன்பமும்-துன்பமும் யாவும் மாயமே.

அவை நிலையற்றவை என்ற நல்லுணர்வுடையவர்களே.

'பிறவியின் நோக்கம் சிவனடி சேரலே' என்று குறிக்கொண்டு அதற்கான நற்செயல்களை மேற்கொண்டு கடவுள் நெறியில் செயல்படுவார்கள்.

Tags:    

Similar News