- கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.
- பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம்.
மேல்மலையனூர் அங்காள பரமேசுவரியை பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குலதெய்வமாக போற்றி வழிபடுகிறார்கள். அவர்கள் அடிக்கடி இத்தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றாலும் ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபடுவதையே சிறப்பாகவும் புண்ணியம் தருவதாகவும் கருகிறார்கள்.
குறிப்பாக ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். இதனால் ஆடி மாதம் முழுவதும் மேல்மலையனூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே உள்ளன. கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வருகிறார்கள்.
ஆலய வளாகத்துக்குள் நுழைவு வாயிலின் அருகே பொங்கல் வைப்பதற்கு என்றே பிரத்தியேகமாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அங்கு பெண்கள் பொங்கலிடுகிறார்கள்.
பொங்கல் தயாரானதும் அதன்மீது மூடியில் பச்சரிசி மாவை பிசைத்து மாவிளக்கில் தீபம் ஏற்றி உள்ளே எடுத்துச் செல்வார்கள். அந்த பொங்கலை அப்படியே அங்களம்மனுக்கு தீபாராதனையாக காட்டி வழிபடுகிறார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த காட்சியை அதிகமாக இத்தலத்தில் காணலாம்.
மங்கலம் தரும் குங்குமம்
அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமம் பிரசாதத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.
ஆத்மார்த்தமாக யார் ஒருவர் அந்த குங்குமத்தை தம் நெற்றியில் பூசிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அங்காளம்மனின் மகத்துவம் புரியும். பொதுவாகவே குங்குமம் என்பது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மங்கலத்தை தரக்கூடியது.
பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம். அதில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு மங்கலத்தை உண்டாக்கும்.
மேல்மலையனூரில் குங்கும பிரசாதம் பெறும்போது மிகவும் பணிவாக பவ்வியமாகப் பெற வேண்டும். பிறகு அதை வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இது எல்லா வித நன்மைகளையும் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கட்டை விரலால் குங்குமம் அணிந்தால் தைரியம் பிறக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் பூசினால் நிர்வாகத்திறமை மேம்படும். நடுவிரலால் குங்குமம் வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.
அங்காளம்மன் காயத்ரி
ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி தன்னோ அங்காளி ப்ரசோதயாத்
என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.