- ஆலயங்களுக்கு செல்லும் போது வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது.
- ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த மலர், பிடிக்காத மலர்கள் என்று உள்ளது.
ஆலயங்களுக்கு செல்லும் போது வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது.
குறைந்தபட்சம் ஒரு முழம் பூவாவது வாங்கி செல்ல வேண்டும். அந்த ஒரு முழம் பூ உங்கள் வாழ்வை நிச்சயம் மேம்படுத்தும்.
ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த மலர், பிடிக்காத மலர்கள் என்று உள்ளது.
அவற்றை தெரிந்து கொண்டு இறை வனை பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.
பூக்களினால் செய்யப்படுவது பூசையாகும்.
அதாவது பூ + செய் என்பது "பூசெய்" என்ற பொருளில் வழங்கப்பட்டு பின்னர் அதுவே பூசை என்றும் பூஜை என்றும் மருவி விட்டது.
சத்வ குணமுடைய வெள்ளெருக்கு, வெள்ளை அலரி, பிச்சி, சிறு சண்பகம், மந்தாரை, கொக்கரகு, புன்னை, நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை, தும்பை இந்த வகையான வெண்ணிற மலர்களை வைகறையிலும், மாலையிலும், இரவிலும் அர்ச்சிப்பவர்கள் பேரானந்தத்தையும், மோட்சத்தையும் அடைவர்.
சிகப்பு நிறம் கொண்ட பாதிரி, செந்தாமரை, பட்டி, செவ்வலரி, செங்கடம்பு, செம்பருத்தி போன்ற ராஜஸ மலர்களை மதிய வேளையில் ராஜஸ காலத்தில் அர்ச் சிப்பவர்கள் போகத்தை அடைவார்கள்.
பொன்னிறம் கொண்ட கொன்றை, சண்பகம், தங் கரளி, ஜவந்தி போன்ற ராஜஸ - தாமஸ மலர்களைக் கொண்டு விடியற்காலையில் அர்ச்சிப்பவர்கள் போக - மோட்சம் இரண்டையும் அடைவார்கள்.
வில்வம், துளசி, மரிக்கொழுந்து, அருகு பச்சை (அருகு துர்க்கை மற்றும் அம்பாளுக்கு விலக்கு) முதலிய ராஜஸ பத்திரங்களால் அர்ச்சிப்பவர்கள் சதுர்வித - சாம, அர்த்த, காம, மோட்ச பலன்களை அடைவார்கள்.
நீல நிறமுள்ள நீலோற்பவத்தால் அர்ச்சித்தவர்கள், வசீகரம், மோகம், இன்பம் ஆகியவற்றை அடைவார்கள்.
கோங்கு பூவில் சரஸ்வதியும், அலரிப் பூவில் பிரம்மாவும், வன்னி பத்ரத்தில் அக்கினியும், நந்தியாவட்டத்தில் நந்தித்தேவரும், புன்னைப் பூவில் வாயுவும், எருக்கில் சூரியனும், செண்பகத்தில் செவ்வேளும், வில்வத்தில் லட்சுமியும், கொக்கரகு பூவில் விஷ்ணுவும், மாவிலங்கில் வருணனும், மகிழம்பூவில் சயசை யும், வாகைப்பூவில் நிருருதியும், சாதிப்பூவில் ஈசானனும், செங்கழுநீர்ப் பூவில் பரிதியும், குமுதப் பூவில் திங்களும், மந்தாரப் பூவில் இந்திரனும், ஊமத்தம் பூவில் குபேரனும், தாமரைப் பூவில் சிவபெருமானும், நீலோற் பவத்திலும், வாசனை மிகுந்த பூக்களிலும் உமா தேவியரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இந்த மலர் களால் பூஜிப்பவர்கள் சகல போகத்தையும், பெருஞ் செல்வங்களையும் பெறுவார்கள்.
அருகு சகோதர வததோசத்தையும், கொன்றை தாயாருக்குச் செய்த கொடுமையையும், வெள்ளெருக்குப் பூ பரஸ்தீரி மன தோசத்தையும், நீலோற்பவம் வாக்கினால் ஏற்பட்ட தோசத்தையும், குங்குமப்பூ ந்வக்கிரக தோசத்தையும், வில்வம் பொய் சொன்ன தோசத்தையும், கத்தரிப் பத்ரம் குஷ்ட ரோகத்தையும், துளசி வறுமையையும், தும்பை கோஹத்தி தோசத்தையும், நெய்தல் பூவும், நெல்லி பத்ரமும், நோய்களை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டவை.
இம்மலர்களைக் கொண்டு சிவபெருமானுக்கு அர்ச்சிப்பதால் மேற்கண்ட தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
தெய்வங்களுக்கு சகஸ்ர நாமம், அஷ்டோத்தரம் போன்ற அர்ச்சனைகள் செய்யும் போது, பூக்கள் குறைவாக இருக்கும்.
அப்போது ரோஜாப்பூ சாமந்திப்பூ போன்ற பூக்களின் இதழ்களையே சிறிது சிறிதாக பிய்த்து அர்ச்சனை செய்யலாமே என்று தோன்றும்.
ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது.
தாமரைப்பூவைத் தவிர மற்ற எந்த பூக்களையும் முழுமையாகவே பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை மந்திரங்கள் நிறைய பாக்கி இருந்து, அர்ச்சனை செய்ய பூக்கள் குறைவாக இருக்கும் போது கூட, முழுமையான ஒரே ஒரு பூவை கையில் வைத்துக் கொண்டு, பாக்கியுள்ள அனைத்து மந்திரங்களையும் சொல்லிவிட்டு, இறுதியில் அந்த ஒரே ஒரு பூவை தெய்வங்களின் பாதங்களில் சேர்த்து விடலாம்.
இப்படி செய்வதால் ஒவ்வொரு நாமாவளிக்கும் ஒவ்வொரு பூவைப்போட்டு அர்ச்சனை செய்த பலன் முழுமையாகக் கிடைக்கும்.