ஆன்மிக களஞ்சியம்

புஷ்கரணியில் நீராடும் முறை

Published On 2023-12-08 11:54 GMT   |   Update On 2023-12-08 11:54 GMT
  • புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி.
  • நதியில் உள்ளம் குளிர குனிந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும்.

   1. நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது.

2. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்து தன் உடம்பில் பூசிக்கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும்.

3. சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது.

4. புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி.

ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும்.

முதுகைக் காட்டக் கூடாது.

5. நதியில் உள்ளம் குளிர குனிந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும்.

ஒவ்வொரு முறையும் ''ஹரி, ஹரி'' என்று சொல்ல வேண்டும்.

6. ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது.

இது வேஷ்டி இல்லாததற்குச் சமம்.

7. பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது.

8. நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ் வதும், சிறுநீர் கழிப்பதும் பாவச்செயலாகும்.

9. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.

10. நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிர்களை உதறக் கூடாது.

11. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும்.

மேலாக எடுத்துப் போடக் கூடாது.

12. நெற்றியில் கோபி சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும்.

சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும்.

இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாம்.

திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும்.

திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம்.

சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.

Tags:    

Similar News