ஆன்மிக களஞ்சியம்
null

ராமகிரி ஆலய சிறப்புகள்-20

Published On 2024-06-05 11:25 GMT   |   Update On 2024-06-05 11:41 GMT
  • இந்த ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அபூர்வமான சிலைகள் உள்ளன.
  • அகஸ்தியர் வித்தியாசமான கோலத்தில் இந்த தலத்தில் மட்டுமே இருக்கிறார்.

1. ராமகிரி ஆலயம் ராமர் காலத்துடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களிலும் சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன.

2. ஆலயத்தின் முன்பகுதியில் மிகப்பெரிய அரசமரம் உள்ளது. பக்தர்களுக்கு நிழல் தரும் வகையிலும், கார்களை நிறுத்துவதற்கும் அந்த பகுதியில் மிகப்பெரிய இடம் அமைந்துள்ளது.

3. இறைவனின் அருவ வழிபாட்டுமுறை சிவலிங்கம், இறைவனின் திருஉருவம் வழிபாட்டு முறை ஸ்ரீகால பைரவ ஸ்வரூபம் எனப்படும்.

4. அஷ்டமி நாட்களில் ராமகிரி ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக உள்ளது. என்றாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

5. காசியில் இருந்து லிங்கம் எடுத்துக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு சென்ற ஆஞ்சநேயர் இந்த இடத்தில்தான் லிங்கத்தை நழுவ விட்டார். எனவே இந்த தலம் காசி, ராமேஸ்வரம் ஆகிய இரு தலங்களுக்கும் சமமான தலமாக கருதப்படுகிறது.

6. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் ஆலயத்தின் சில பகுதிகள் சீரமைக்கப்படாமலேயே இருக்கின்றன. இதனால் சப்த மாதர் சன்னதி உள்பட சில இடங்களில் வவ்வால்கள் நிறைந்து உள்ளன.

7. கால பைரவரின் வாகனம் நாய். அதனால்தான் என்னவோ இந்த ஆலயத்தின் வெளிப்பகுதியில் நிறைய நாய்கள் உலா வருவதை காண முடிகிறது. நந்தி தீர்த்தம் அருகிலும், கார் பார்க்கிங் பகுதியிலும் ஏராளமான நாய்கள் அங்கு சுற்றியபடியே இருக்கின்றன.

8. ஆஞ்சநேயர் இந்த தலத்தில் தவற விட்ட லிங்கத்தை எப்படியாவது மீட்டு செல்ல வேண்டும் என்று தனது வாலால் லிங்கத்தை இழுத்தார் என்பது தல வரலாறு ஆகும். மரகதாம்பிகை சன்னதி அருகே இதை பிரதிபலிக்கும் வகையில் அற்புதமான சிற்பம் ஒன்று ஒரு தூணில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

9. ராமகிரி கால பைரவரை 8 வாரம் தொடர்ச்சியாக வந்துதரிசனம் செய்தால் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். முதல் வாரம் எந்த கிழமை வழிபாட்டை தொடங்குகிறார்களோ, அதே கிழமைகளில் 8 வாரமும் வழிபட வேண்டும் என்று விதி வகுத்துள்ளனர்.

10. இந்த தலம் மிகச்சிறந்த பரிகார தலமாகும். திருமணம், குழந்தை பாக்கியம், எதிரிகள் தொல்லை, பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இந்த தலத்தில் பரிகாரம் செய்கிறார்கள்.

11. இந்த தலத்தில் திருமணம் நடத்தப்படுகிறது. ஆனால் 15 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

12. கோவிலுக்குள் செல்போன், கேமரா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லுங்கி அணிந்து வருபவர்களுக்கும் ஆலயத்துக்குள் அனுமதி இல்லை.

13. இந்த ஆலயத்தின் அனைத்து சன்னதிகளிலும் ஆச்சார விதிமுறை படியே பூஜைகளும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

14. கால பைரவர், வாலீஸ்வரர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்யும் போது தமிழிலும் அர்ச்சனை செய்கிறார்கள் என்பது குறிப்பித்தக்கது.

15. ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் கண்காணிப்பதற்கு ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை தனி அறையில் இருந்து கண்காணிக்கிறார்கள்.

16. ஆலயத்தின் சுற்றுச்சுவர்களில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. அனைத்து கல்வெட்டுக்களும் ஆதி தமிழில் உள்ளன. பழமையான தமிழ் மன்னர்கள் ஆட்சி காலத்தில் அந்த கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

17.தீபம், கற்பூரம் போன்றவை ஏற்றுவதற்கு இந்த தலத்தில்தடை விதிக்கப்பட்டுள்ளது. அகல் விளக்கு மட்டுமே ஏற்ற அனுமதிக்கிறார்கள். அதுவும் ஆலயத்துக்கு வெளியில்தான் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

18. ராமகிரி மலையில் இருக்கும் பாலமுருகர் ஆலயம் 1967ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இங்கு ஆடி மாதம் கிருத்திகை விழா மிக கோலாகலமாக நடக்கிறது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் அந்த சமயத்தில் திரள்வார்கள்.

19. இந்த ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அபூர்வமான சிலைகள் உள்ளன. அகஸ்தியர் வித்தியாசமான கோலத்தில் இந்த தலத்தில் மட்டுமே இருக்கிறார். கஜ முக விநாயகர், வீர பத்திரர் ஆகியோர் அபூர்வமான வடிவமைப்பாக கருதப்படுகிறது.

20.நமது ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடு.

Tags:    

Similar News